கோலாலம்பூர், ஜூலை 7-
நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், நீதிபதிகள் நியமனம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளில் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அவை குறித்து விசாரிக்க, அரச விசாரணை ஆணையம் – RCI-யை அரசாங்கம் அமைக்க வேண்டுமென பி.கே.ஆரைச் சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி கூறுகையில், தலைமை நீதிபதி நியமனத்தில் தலையீடு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், 2007-ஆம் ஆண்டு VK லிங்கம் வீடியோ ஊழலை நினைவூட்டுவதாக உள்ளதாகக் கூறினார்.
பொதுமக்களிடையே பரவியுள்ள தகவல்களை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் எனவும், இல்லையெனில் அரசாங்கம் மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கைக் குறைவு ஏற்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
புச்சோங் ஜெயாவில் உள்ள சுபாங் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ ஸ்ரீ ரஃபிசி இவற்றைத் தெரிவித்தார்.

