ஜித்ரா, ஜூலை 7-
கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் இன்று கெடா, ஜித்ராவுக்கு அருகே உள்ள சுங்கை கோரோக் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
அவர்கள் பயணித்த புரோட்டான் இஸ்வாரா செடான் வாகனம் ஆற்றில் பாய்ந்து மூழ்கியிருந்தது இன்று கண்டுப்பிடிக்கப்பட்டதன் வழி அச்சம்பவம் தெரிய வந்தது.
இந்த துயர சம்பவம் குறித்து திங்கள்கிழமை காலை 8:38 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக, கெடா தீயணைப்பு மீட்புத் துறையின் மண்டலம் 1 தலைவர், மூத்த தீயணைப்பு அதிகாரி அஹமட் அமினுதீன் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
ஒரு புரோட்டான் இஸ்வாரா செடான் கார் ஆற்றில் மூழ்கியிருப்பதாகவும், அதில், ஒரு ஆண், ஒரு பெண், மூன்று பிள்ளைகள் மற்றும் ஒரு கைக்குழந்தை என ஆறு பேர் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.
தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். தற்போது, இறந்தவர்களின் உடல்களை வெளியேற்றி, உறவினர்களால் உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஹமட் அமினுதீன் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆறு மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவரைத் தொடர்புக்கொள்ள முடியவில்லை என உறவினர்கள் கவலைத் தெரிவித்திருந்தனர்.

