Site icon அநேகன்

13ஆவது மலேசியத் திட்டம்: இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகத்தின் பக்கம் நிற்க வேண்டும்! -கணபதிராவ்

கிள்ளான், ஜூலை 8-

13ஆவது மலேசியத் திட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்திய சமூகத்திற்கு இது ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

மடானி அரசாங்கம், இந்தியர் உருமாற்றப் பிரிவு – மித்ரா வாயிலாக கல்வி உதவி, ஆலய நில உதவி, திறன் பயிற்சி மற்றும் இலக்கு சார்ந்த சமூகத் திட்டங்கள் மூலம் இந்தியர்களின் நீண்டகால சவால்களை எதிர்கொள்ள முயற்சித்து வருகிறது.

ஆயினும், இந்த முயற்சிகள் கட்டமைப்பு, நிலைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு இல்லாமல் முழுமையான மாற்றத்தை தராது என அவர் எச்சரித்தார்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினராக இந்தியர்களின் உயர்கல்வி பிரதிநிதித்துவம், இளைஞர்களின் மேம்பாடு, ஆலயங்கள், இடுகாடுகளுக்கு நிரந்தர நிலத் தீர்வு, சிறு வணிகங்களுக்கு நிதி மற்றும் பயிற்சி வாய்ப்புகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றம், அரசாங்க விவாதங்கள் மற்றும் மக்கள் மட்டத்தில் தாம் தொடர்ந்து எழுப்பி வந்துள்ளதாக, கணபதிராவ் குறிப்பிட்டார்.

13-ஆவது மலேசியத் திட்டத்தில், இந்திய சமூகத்தின் தேவைகள் குறித்து தெளிவற்றதாக குறிப்பிடப்பட்டால், அனைத்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடனும் தெளிவாகவும் வலிமையாகவும் குரல் கொடுக்க வேண்டும் என கணபதிராவ் வலியுறுத்தினார்.

“இது அரசாங்கத்தை எதிர்ப்பது அல்ல, நாம் பிரதிநிதிக்கக்கூடிய இந்தியர்களின் நலனைப் பாதுகாப்பதாகும்,” என்றாரவர்.

“அவ்விவகாரத்தில், ம.இ.கா. துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சரவணனின் உறுதியான செயல்பாடு பாராட்டுக்குரியது. அவரைப் போன்று, இதர இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதே அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

இந்திய செனட்டர்கள், நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு தொடர்புடைய நிறுவனங்களிலுள்ள தலைவர்களும் 13-ஆவது மலேசியத் திட்டத்தை ஆய்வு செய்து, குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டும்” என வலியுறுத்திய கணபதிராவ், இந்திய சமூகத்திற்கு தேவையானவற்றைக் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டார்.

– கல்வி மற்றும் திறன் பயிற்சிக்கு நியாயமான அணுகல்
– கோயில்கள் மற்றும் இடுகாடுகளுக்கு நிரந்தர நிலத் தீர்வு
– இலக்கவியல் பொருளாதாரம் மற்றும் தொழில்திறன் கல்வி – TVET-ட்டில் பங்களிப்பு
– இந்திய வணிகங்களுக்கு கடனுதவி மற்றும் தொழில்முனைவு ஆதரவு
– இளைஞர் மற்றும் பெண்கள் மேம்பாட்டு திட்டங்கள்
– தேசிய ரீதியில் முடிவெடுக்கும் அமைப்புகளில் இந்திய பிரதிநிதித்துவம்
– வெளிப்படையான கண்காணிப்பு மற்றும் அமலாக்கம்

“இவையனைத்தும், 13ஆவது மலேசியத் திட்டத்தில் இடம்பெறாவிட்டால், திருத்தங்கள் மற்றும் பட்ஜெட் கட்டமைப்புகள் மூலம் சேர்க்கப்பட வேண்டும்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக நின்று, சமூகத்தின் எதிர்காலத்திற்காக போராட வேண்டும். மௌனம் இனியும் ஏற்புடையதல்ல. மக்கள் நம்மை கவனிக்கின்றனர்,” என கணபதிராவ் அவரது அறிக்கையின் வழி கூறினார்.

Exit mobile version