பெஸ்தாரி ஜெயா, ஜூலை 9-
சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியரும் மலேசிய தமிழ்ப்பள்ளிகள் தலைமையாசிரியருமான S.S.பாண்டியன் பணி ஓய்வுப் பெற்றார்.
செல்லப்பெருமாள் முத்தையா – செம்பாயி சந்தனம் தம்பதியரின் 5ஆவது பிள்ளையாக 1965ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பிறந்த அவருக்கு, ஆசிரியையான ஜெயந்தி காத்தான் என்ற மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனர்.
1972ஆம் ஆண்டு கம்போங் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக்கல்வியைத் தொடங்கிய பாண்டியன், பின்னர் ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார்.
1978ஆம் ஆண்டு ஸ்ரீ தஞ்சோங் இடைநிலைப்பள்ளியில் புகுமுக வகுப்பும், அதன் பின்னர் படிவம் 1 முதல் 5ஆம் வரையிலும் சுல்தான் சுலைமான் ஷா பள்ளியிலும் கல்வி பயின்ற அவர், 6ஆம் படிவத்தை, சுல்தான் அப்துல் அசிஸ் கல்லூரியில் முடித்தார்.
1991ஆம் ஆண்டில் பஹாங், குவாந்தானிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வி பயின்ற பாண்டியன், 2015ஆம் ஆண்டில் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்திலும் கல்வித் துறையில் உயர்கல்வியைத் தொடர்ந்தார்.
இதற்கிடையே, 1987ஆம் ஆண்டு கம்போங் பாரு தமிழ்ப்பள்ளியில் இடைக்கால ஆசிரியராக பணியாற்றத் தொடங்கிய அவர், பின்னர் சுங்கை ரெங்கம், கிளேன்மேரி, ஆர்.ஆர்.ஐ ஆகிய பள்ளிகளிலும் பணியைத் தொடர்ந்தார்.
கல்வித்துறையில் பயிற்சி முடித்த பாண்டியன் நிரந்தர ஆசிரியராக, 1994ஆம் ஆண்டு தொடங்க 2008ஆம் ஆண்டு வரையில், அவரது தொடக்கக்கால பள்ளியான கம்போங் பாரு தமிழ்ப்பள்ளியில் பணியாற்றினார்.
2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையில் சுங்கை திங்கி தமிழ்ப்பள்ளியில் புறப்பாட முதுநிலை உதவி ஆசிரியராக செயல்பட்ட அவர், 2011ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரையில் ராஜா மூசா தமிழ்ப்பள்ளியிலும் 2022ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரையில் பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியிலும் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.
ஆசிரியர் பணியில் அருஞ்சேவையை வழங்கியதன் அங்கீகாரமாக, 2007, 2018 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருதும் 2024ஆம் ஆண்டில் அரசாங்க பணியாளர்களுக்கான PPT விருதும் வழங்கி பாண்டியன் கௌரவிக்கப்பட்டார்.
இவற்றின் ஊடே, 2017ஆம் ஆண்டில் கோலசிலாங்கூர் மாவட்டத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள் தலைமையாசிரியர் மன்றத்தில் செயலாளராக பொறுப்பேற்ற பாண்டியன், பல நிலைகளைக் கடந்து, 2022ஆம் ஆண்டில் தேசிய நிலையிலான அம்மன்றத்தின் தலைவராக பொறுப்பேற்று, பணி ஓய்வு பெறும் வரையில் திறம்பட செயலாற்றினார்.
கல்வித்துறை தவிர, இந்திய சமூகத்தின் மேன்மைக்காக அரசியல் வாயிலாகவும் சமூகநல நடவடிக்கைகளால் பெரும் பங்களிப்பையும் பாண்டியன் வழங்கியுள்ளார்.
இதனிடையே, பாண்டியனின் பணி நிறைவு விழா இன்று பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்வில் உருக்கமாக பேசிய பாண்டியன், தமிழ்ப்பள்ளி ஆசிரியராக, தலைமையாசிரியராக தாம் கடந்தவந்த பாதை சவால்மிக்கது என்றார்.
இருந்தும், கல்லில் செதுக்கிய எழுத்தைப் போல், வாழ்வின் இறுதிவரையிலும் அவை நினைவில் நிற்கும் என கூறிய அவர், ஆசிரியர் பணியில் தாம் திறம்பட செயலாற்றுவதற்கு தமக்கு தோள் கொடுத்த ஆசிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி பாராட்டினார்.
மேலும், தமிழ்ப்பள்ளிகளின் பற்றாளனாக பணி ஓய்வுக்கு பின்னரும் தமது சேவைகள் தொடரும் என்றும் பாண்டியன் உறுதியளித்தார்.
