Site icon அநேகன்

நஜீப்பை வீட்டுக்காவலில் வைப்பது குறித்து அன்வாரிடம் பேசுங்கள்! -ஸாஹிட்டுக்கு அம்னோ தொகுதிகள் கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18-

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கை வீட்டுக்காவலில் வைக்க, 16-ஆவது பேரரசர் வழங்கிய பொதுமன்னிப்பின் கூடுதல் உத்தரவை அமல்படுத்துவது குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பேசும்படி, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு அக்கட்சியின் தொகுதி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று இரவு இங்கு நடைபெற்ற தனிப்பட்ட சிறப்பு கூட்டத்தில், நாடு முழுவதிலுமிருந்து வந்து கலந்துக் கொண்ட 145 தொகுதித் தலைவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்த கூடுதல் உத்தரவு அமலாக்கப்படாவிட்டால் அம்னோ தொகுதித் தலைவர்கள் மவுனமாக இருக்க மாட்டார்கள் என அக்கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 145 தொகுதித் தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பேசிய வங்சா மாஜூ தொகுதித் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் ஷாஃபி அப்துல்லா கூறினார்.

“இந்த சிறப்பு கூட்டம், முன்னாள், தற்போதைய மற்றும் வருங்கால தலைவருக்காக பணியாற்றுவதற்கு உறுதியளிக்கும் உணர்வுடன் நடைபெற்றது.

கூடுதல் உத்தரவு உடனடியாக அமலாக்கப்படுவதை உறுதி செய்யும் முயற்சிகளும் இதில் அடங்கும். ஆனால், பிரதமர் இதை அமலாக்கத் தவறினால், நாங்கள் மவுனமாக இருக்க மாட்டோம். நேரம் வரும்போது உரிய நடவடிக்கைகள எடுப்போம்,” என்றார்.

டத்தோ ஸ்ரீ நஜீப்பை வீட்டுக்காவலில் வைக்கும் கூடுதல் உத்தரவு ஒன்று உள்ளதை, இவ்வாண்டு ஜனவரி 4ஆம் தேதி பகாங் அரண்மனை வெளியிட்டிருந்த கடிதம் வாயிலாகவும் பின்னர், அது செல்லுபடியாகுமென ஜனவரி 6ஆம் தேதி அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் உறுதிபடுத்தியுள்ளன.

இந்த உத்தரவை, ஒரு வருடத்திற்கு மேலாக முன்னாள் சட்டத்துறை தலைவர் மறைத்திருந்தது மிகவும் வருத்தமளிக்கிறது என்று கூறிய அவர், இது வெளிப்படைத்தன்மை, கடமையாற்றுதல் ஆகியவற்றை மீறும் செயல் என்பதோடு அரச குடும்பத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது என்றும் டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் ஷாஃபி குற்றம்சாட்டினார்.

நீதியையும் அரச குடும்பத்தையும் பாதுகாக்க மூன்று முக்கிய முடிவுகளை உடனடியாக அமலாக்க வேண்டும் என்று அம்னோ தொகுதித் தலைவர்கள் ஒருமித்து ஒப்புக்கொண்டு, அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

இந்த பிரச்சினை ஒரு தனிநபரின் உரிமையை மட்டும் பாதிக்கவில்லை, மாறாக சட்டத்தின் இறையாண்மை மற்றும் அரச குடும்பத்திற்கு மரியாதை செலுத்தப்பட வேண்டிய முக்கியத்துவத்தை உள்ளடக்கியது என்றார்.

பிரதமர் விரைவில் இந்த கூடுதல் உத்தரவை மதித்து, அரசியல் பதற்றங்களை தவிர்க்க தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார் என்ற நம்பிக்கையை டத்தோ ஸ்ரீ முகமட் ஷாஃபி வெளிப்படுத்தினார்.

இதனிடையே, கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் இந்த உத்தரவை கேலி செய்ததாக கூறப்படும் கருத்து குறித்து வினவப்பட்ட போது, அது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமே என்றும், ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்றும் முகமட் ஷாஃபி தெளிவுபடுத்தினார்.

Exit mobile version