Site icon அநேகன்

கோலசிலாங்கூர் வாகீசர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை பெண்ணரசி தனபால் பணியிட மாற்றம்!

கோலசிலாங்கூர், ஜூலை 18-

கோலசிலாங்கூர் வாகீசர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை பெண்ணரசி தனபால், 15 ஆண்டுக்கால சேவைக்குப் பிறகு இன்று அப்பள்ளிக்கு விடை கொடுத்தார்.

அடுத்து அவர், முதன்முதலில் நிரந்தர ஆசிரியராக பணியாற்றிய பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியில் அவரது கல்விச்சேவையை தொடரவுள்ளார்.

பிரேசர் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவியான பெண்ணரசி, சிறுவயதில் குடும்ப உறுப்பினர்களை விட்டு பிரிந்திருந்து, பஹாங், ரவூப்பிலுள்ள உறவினர் வீட்டில் தங்கி அவரது இடைநிலைக் கல்வியை, கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

குடும்ப உறவுகள் மீது அன்பு ஏக்கம் கொண்டிருந்தாலும், அது அவர் கல்விக்கேள்வியில் சிறந்து விளங்குவதற்கு எவ்வித தடையாகவும் இருக்கவில்லை.

பின்னர், கோலாலம்பூரிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் துறையில் பட்டம் பெற்ற அவர், ஓ.யூ.எம். பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வியைத் தொடர்ந்தார்.

4 பிள்ளைகளுக்குத் தாயாரான பெண்ணரசி, அந்நால்வரையும் பட்டதாரிகளாக்கியுள்ளார். ஆசிரியர் பணிக்கு மத்தியிலும் தனது சொந்த வாழ்க்கைக்கு அவர் கொடுத்துள்ள முக்கியத்துவத்தை அது பறைச்சாற்றுகின்றது.

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகள் தலைமை ஆசிரியர் மன்றத்தில் பொருளாளராகவும் கோலசிலாங்கூர் மாவட்ட தமிழ்ப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மன்றத்தின் தலைவராகவும் பெண்ணரசி சேவையாற்றி வருகின்றார்.

அவரது தலைமைத்துவத்தில், வாகீசர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து அடைவுநிலையைக் கண்டுள்ளனர்; குறிப்பாக, அப்பள்ளியும் கட்டமைப்பு ரீதியில் பெரும் மாற்றம் கண்டுள்ளது.

இதனிடையே, பெஸ்தாரி ஜெயா பள்ளிக்கு மாற்றலாகி செல்லவிருக்கும் பெண்ணரசிக்கு இன்று வாகீசர் தமிழ்ப்பள்ளியில் பிரியாவிடை விருந்து அளிக்கப்பட்டது.

அதில், உணர்வுப்பூர்வமாக பேசிய பெண்ணரசி, வாகீசர் தமிழ்ப்பள்ளியில் தமது 15 ஆண்டுக்கால சேவையை மறக்க முடியாது என்றும் தமது பணியை செவ்வனே ஆற்ற உதவிகள் புரிந்த சக ஆசிரியர்கள், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி பாதுகாவலர்கள் என பல்வேறு தரப்பினருக்கு நன்றியைக் கூறிக்கொண்டார்.

 

கல்வி மட்டுமே ஒரு சமூகத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் என்பதால், வாகீசர் மாணவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பயில வேண்டுமெனவும் பெண்ணரசி கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, பெண்ணரசிக்கு மாற்றாக, வாகீசர் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவரான திருச்செல்வகுமார் ராமன், தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

 

Exit mobile version