ஈப்போ, ஜூலை 18-
பேரா மாநில இந்தியர் காற்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான காற் பந்துப் போட்டி வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
ஈப்போ பாடாங்கில் நடைபெறவிருக்கும் இப்போட்டிக்கு மாநில அரசாங்கம் முழு ஆதரவு வழங்கியுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் , பேரா மாநில இந்தியர் காற்பந்து சங்கத் தலைவருமான டத்தோ அமாலுடின் இஸ்மாயில் குறிப்பிட்டார்.
14 ஆண்டாக நடத்தப்படும் இப்போட்டியில் பேரா மாநிலத்தில் ஆண்கள் பிரிவில் 38 தமிழ்ப் பள்ளிகளும் பெண்கள் பிரிவில் 24 பள்ளிகளும் பங்கேற்கின்றன.
இந்திய மாணவர்கள் விளையாட்டுத் துறை குறிப்பாக காற்பந்து துறையில் ஈடுபடுவதற்கு ஓர் உந்துதல் ஏற்படுத்த இந்தப் போட்டியை ஆண்டு தோறும் தாங்கள் நடத்தி வருவதாக அவர் சொன்னார்.
இப்போட்டியை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் தொடக்கி வைப்பார் என்றும் அவர் கூறினார்.
இப்போட்டிக்கான செலவுகளை பேரா மாநில அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு உறுதுணை புரிந்த அ. சிவநேசனுக்கு டத்தோ அமாலுடின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஆதரவாக திரளாகக் கலந்து கொள்ளும்படி சுற்று வட்டார பொது மக்கள் மற்றும் பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

