புக்கிட் மெர்த்தாஜாம், ஜூலை 18-
மலேசிய மக்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பாக, வாழ்க்கைச் செலவு சுமையை எதிர்கொள்ளும் வகையில் அரசாங்கம் ஒரு முக்கியமான திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த அறிவிப்பை மிகவும் விரிவாகவும், உறுதியாகவும் தயாரிக்க, நிதி அமைச்சின் கீழ் உள்ள அவரது குழுவிற்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
“நமது நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை வாழ்க்கைச் செலவு ஆகும். இந்த ஆண்டு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்துவதற்கு 10 பில்லியன் ரிங்கிட் செலவாகுகின்றது.
அடுத்த ஆண்டு மேலும் 18 பில்லியன் ரிங்கிட் செலவாகும். இதனுடன், ரஹ்மா பண உதவி (STR) திட்டத்திற்கு 13 பில்லியன் ரிங்கிட் என மொத்தமாக 23 பில்லியன் ரிங்கிட் செலவாகும்,” என்று அவர் விளக்கினார்.
“வாழ்க்கைச் செலவு உயர்வு நமது நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நிகழ்கிறது. ஆனால், இதற்கு ஒரு தீர்வு காண நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் நிதி அமைச்சு இது தொடர்பாக புதிய அணுகுமுறைகளை ஆராய்ந்து வருகிறது.
இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில், திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடவுள்ளோம். இந்த அறிவிப்பு மிகவும் உறுதியானதாக இருக்க, நாங்கள் இப்போது அதை மேலும் மெருகேற்றி வருகிறோம்,” என இன்று பினாங்கில் உள்ள மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – UiTM-மில் நடைபெற்ற புமிபுத்ரா மாஸ்டர் திட்டம், துனாஸ் மதானி மற்றும் JKPSB வீட்டு வசதித் திட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய போது, டத்தோ ஸ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, தனது பேஸ்புக் பதிவில், மலேசிய மக்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த அறிவிப்பின் விவரங்கள் எதுவும் அப்போது வெளியிடப்படவில்லை.
இந்த அறிவிப்பு வாழ்க்கைச் செலவு சுமையை குறைக்கும் வகையில் மக்களுக்கு பயனளிக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

