Site icon அநேகன்

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி ஏற்பாட்டிலான தேசிய சதுரங்க போட்டி; 1,300 மாணவர்கள் பங்கேற்பு!

ஷா ஆலம், ஜூலை 26-

சிலாங்கூர், ஷா ஆலமிலுள்ள தேசிய வகை மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி வாரிய நிர்வாகத்தின் ஏற்பாட்டில், 4ஆவது தேசிய சதுரங்க போட்டி இன்று தொடங்கியது.

“மூளை இயக்கத்தை ஊக்குவிக்கும் சிந்தனைத் திறன்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பள்ளி வளாகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில், நாடு முழுவதிலுமிருந்து தமிழ்ப்பள்ளி மாணவர்கள், இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் என 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

“சதுரங்கம் ஒரு விளையாட்டு மட்டுமல்ல; அது ஒரு கல்விமுறை. இது நம் மாணவர்களின் எண்ணத் திறனையும் நிதானமான முடிவெடுக்கும் திறனையும் வளர்க்கும் ஒரு ஆற்றல்மிக்க கருவி”, என பள்ளி வாரிய நிர்வாகத் தலைவர் கா. உதயசூரியன் தெரிவித்தார்.

குறிப்பாக, இந்தியர்களின் வரலாற்றில் சதுரங்க விளையாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதிகாசங்கள், தமிழ் மன்னர்கள் வரலாற்றை ஆராயும்போது நாம் உணரலாம்.

பிரச்சனைகளை நுணுக்கமாக கையாண்டு, எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதே சதுரங்க விளையாட்டு வழங்கும் படிப்பினை. அதை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விளையாடுவதன் வழி, அவர்களின் சமயோசித புத்தி கூர்மையாகும். விவேகமுடையவர்களாக அவர்கள் விளங்குவார்கள் என உதயசூரியன் கூறினார்.

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி வாரியம், சிலாங்கூர் அரசாங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடத்தப்படும் இப்போட்டி வரும் காலங்களிலும் தொடரும் என உதயசூரியன் உறுதியளித்தார்.

இதனிடையே, சதுரங்கப் போட்டியின் இயக்குநர் இளங்கோவன் கூறுகையில், நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்கேற்றுள்ளது பெருமிதம் அளிப்பதாக கூறினார்.

அறிவாற்றலை கூர்மைப்படுத்தும் இப்போட்டி, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க துணைப்புரியும் என கூறிய இளங்கோவன், வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு கிண்ணம், ரொக்கம் முதலானவை வழங்கப்படும் என கூறினார்.

இன்றைய போட்டியில் கலந்துக்கொண்ட ஆயுரத்திற்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு உற்சாக மூட்டியது கவனத்தை ஈர்த்தது.

 

Exit mobile version