பத்துமலை, ஆக.3-
மாணர்கள் கல்வி, குடும்ப சுபிட்சம், ஆரோக்கியம், வெற்றி என அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஸ்ரீ முருகன் நிலயம் கல்வி யாத்திரையை இன்று ஏற்பாடு செய்தது.
31 ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த கல்வி யாத்திரையில் நாடு முழுமையும் இருந்து 5,000 திற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டதாக ஸ்ரீ முருகன் நிலயத்தின் இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்.
“பினாங்கு , பேரா, ஜோகூர் என நாடு முழுவதும் இருந்து மாணவர்கள் பல சவால்களைக் கடந்து இந்தக் கல்வி யாத்திரையில் பங்கேற்றனர்.வெகு தொலைவில் இருந்து வந்து களைப்பாக இருந்தாலும் கூட காலை 8.01 க்கு காயத்ரி மந்திரத்தோடு தொடங்கிய யாகம் மற்றும் பூஜையில் இவர்கள் ஒருமனதாக இறைவனை வேண்டியது தனிச் சிறப்பாகும் “ என்று கல்வி யாத்திரைக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
“நேரடியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களைத் தவிர்த்து சுமார் 20,000 பேர் இணையம் வாயிலாகவும் இதனைக் கண்டு பயனடைந்தனர். அக்னி முன் ஞானம் மற்றும் சக்தி கிடைப்பதற்காக நடத்தப்பட்ட இந்த கல்வி யாத்திரை வழி ஒவ்வொரு மாணவரும் தேர்வில் உயர்ந்த நிலையை அடைவர் என்பது நிச்சயம்” என்றார் சுரேன்.
“ கல்வி யாத்திரையில் கலந்து கொள்வதற்கு முன்பு மாணவர்கள் தினமும் இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை குளித்தல், சாமி கும்பிடுதல், கடந்த ஆண்டுகளின் தேர்வு தாள்களை மீள்பார்வை செய்தல் வேண்டும்.இந்த நேரத்தில் இவர்களோ , பெற்றோர்களோ கூட தொலைக்காட்சி பார்க்கக் கூடாது. இதுவே கல்வி விரதம். இதனை மாணவர்கள் அவசியம் அனுசரிக்க வேண்டும் “ என்றார்.
யாகத்திற்குப் பின்னர் மாணவர்கள் அனைவரும் பாத யாத்திரையாக பத்துமலையின் 272 படிகளை ஏறி திருச்செந்தூர் முருகனின் அருள் வேண்டினர்.
“வெற்றியை நோக்கி மாணவர்கள் மேற்கொண்ட இந்த கல்வி யாத்திரை முன்பு, பி, சி தேர்ச்சி நிலை பெற்றவர்களை ஏ நிலைக்கு உயர்த்தும்” என்றார் சுரேன்.
இதனிடையே, இந்த ஆண்டு ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யாத்திரை ஓர் உணர்ச்சிபூர்வ நிகழ்ச்சி என்றும் மறைந்த டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா ஞான குருவாக மாறி கல்வி தந்தையாக மாறியதை உணர முடிவதாகவும் அவர் விவரித்தார்.
கல்வி யாத்திரை முடியும் வரை மழை இல்லை. தெளிவான வானிலை. டான்ஸ்ரீ தம்பிராஜாவின் ஆசி நிறைந்திருப்பதையே இது காட்டுகிறது என்றார் சுரேன்.

