சுங்கை சிப்புட், ஆக 5-
வட மாநிலங்களின் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக உதவி நிதியம் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஈப்போ தேசிய வகை செயின்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த வேதாஷினி இராதாகிருஷ்ணன் முதல் பரிசான 1,000 ரிங்கிட் மற்றும் வெற்றிக் கிண்ணத்தை வென்றார்.
வேதாஷினியின் இந்த வெற்றிக்காக அவர் பயிலும் செயின்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளிக்கு 2,500 ரிங்கிட் மதிப்புள்ள விவேக தொலைக்காட்சி பெட்டி ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.
இப்போட்டியில் பினாங்கு ராமகிருஷ்ணா தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த சார்வினி பரமேஸ்வரன் இரண்டாவது இடத்தைப் பெற்று 700 ரிங்கிட் பரிசு தொகை மற்றும் வெற்றிக் கிண்ணத்தையும் , சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீகௌசல்யா மூன்றாவது பரிசான 500 ரிங்கிட் பரிசு தொகை மற்றும் வெற்றிக் கிண்ணத்தையும் பெற்றார்.
பேரா, பினாங்கு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களின் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்ட இந்த கட்டுரைப் போட்டியின் இறுதிச் சுற்றில் பினாங்கு, பேரா ஆகிய மாநிலங்களின் எட்டு தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர் .
சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், போட்டியில் பங்கேற்ற மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
பினாங்கு ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த அஞ்சனா தீபன் ராஜ் , புண்டுட் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த சுந்தரவேல் கணேசன், செயின்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சைந்தவி கோவலன், பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த லாவண்யா மற்றும் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சாஸ்வினி ஆகியோர் ஆறுதல் பரிசாக 100 ரிங்கிட்டையும், கிண்ணத்தையும் பெற்றனர்.
இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் போக்குவரத்து கட்டணமாக 100 ரிங்கிட் ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவிற்கு பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான அ. சிவநேசன் சிறப்பு வருகை புரிந்தார்.
பல தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் பற்றாக்குறை மிகவும் மோசமாக இருக்கும் உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தோட்டப்புறங்களில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள் வெளியேறியது மற்றும் இந்தியர்களின் பிறப்பு விகிதம் குறைந்ததும் இதற்கு காரணங்கள் என்பதை தனது உரையில் சிவநேசன் சுட்டிக் காட்டினார்.
இது ஒரு பிரச்சினையாக இருந்தாலும் மாணவர்கள் குறைவாக இருக்கின்ற பள்ளிகளில் மாணவர்களை அதிகரிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் உட்பட பல தரப்பினர் தீவிர முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார் .
மாணவர்களிடையே கட்டுரைப் போட்டியை நடத்தி அவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்த அதே வேளையில் அவர்களுக்கு ஊக்கத்தையும் ஏற்படுத்திய தமிழ்ப்பள்ளி நிதியத்தின் சேவையை சிவநேசன் வெகுவாகப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளி நிதியத்தின் தலைவர் வே.விவேகானந்தன், மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் விஜயலட்சுமி , ஆகியோரின் உரைகளும் இடம் பெற்றன.
இந்நிதியத்தின் அறங்காவலர் பரமசிவம், ரகுநாதன், அம்பலவாணன், செயலாளர் கே.பத்மநாபன், ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

