ஷா ஆலம், ஆக. 5-
மலேசிய இந்து சங்க சிலாங்கூர் மாநில பேரவைக்கு மாநில அரசாங்கம் 20,000 வெள்ளி மானியம் வழங்கும் என்று இம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.
லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ சமய செயற்குழுவிடம் இந்து சங்கம் செய்து கொண்ட விண்ணப்பத்தின் பேரில் இந்த மானியம் வழங்கப்படும் என்றார் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான பாப்பாராய்டு.
இரு தினங்களுக்கு முன்பு கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் மலேசிய இந்து சங்க சிலாங்கூர் மாநில பேரவையின் 47ஆவது திருமுறை ஓதும் விழாவைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டார் .
தமிழர் சார்ந்த கலை, கலாசாரம் மற்றும் சமய பண்புகளை உலகிற்கு எடுத்துரைக்கும் ஓர் உன்னத நிகழ்வாக இந்த திருமுறை நிகழ்வு அமைந்திருப்பதாக அவர் சொன்னார்.
குறிப்பாக, இளையோர் மத்தியில் சமய உணர்வையும் உயரிய பண்புகளையும் ஊட்டுவதில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெரிய பங்கை ஆற்றுகின்றன.
இதற்காக இந்து சங்கப் பொறுப்பாளர்களை அவர் வெகுவாகப் பாராட்டினார் .
இந்த நிகழ்ச்சியில் மலேசிய இந்து சங்கத் தேசிய தலைவர் தங்க கணேசன், மாநில பேரவைத் தலைவர் மனோகரன் கிருஷ்ணன், ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சரஸ்வதி வேலு ஆகியோர் உரையாற்றினர்.
திருமுறை ஓதும் போட்டியில் மொத்தம் 650 பேர் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீ அண்டலாஸ் பேரவை முதல் பரிசையும் காஜாங் பேரவை இரண்டாவது பரிசையும் செர்டாங் பேரவை மூன்றாவது பரிசையும் பத்து கேவ்ஸ் பேரவை நான்காவது பரிசையும் ஷா ஆலம் பேரவை ஐந்தாவது பரிசையும் வென்றன.

