கோலாலம்பூர், ஆக.6-
அண்மையில் நடைபெற்ற பிகேஆரின் தலைமைத்துவ மன்றத் தேர்தலில் கையூட்டு வழங்கப்பட்ட வீடியோ பதிவு வைரலாகப் பகிரப்பட்டுள்ளதை விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஸ் கட்சியின் தொடர்பு பிரிவு தலைவர் அமாட் ஃபாடில் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
பகிரப்பட்ட வீடியோவில், வங்சா மாஜு பிகேஆர் தலைவர் லாய் சென் ஹெங், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து பெரும் தொகையைப் பெற்று உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டதை வேறொருவருடன் விவாதிக்கும் காட்சி பதிவிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக அமாட் ஃபாடில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த விவகாரமானது நஜிப் ரசாக் முறைகேடாக அரசின் பணத்தைக் களவாடியது போன்று இருப்பதால், ஊழல் தடுப்பு ஆணையம் இதனை விசாரணை செய்து, உண்மையை வெளியிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டதாக மலேசிய கினி செய்தி வெளியிட்டுள்ளது.
-பொன் முனியாண்டி

