கோலாலம்பூர், ஆக.7-
இந்திய பொருளாதார உருமாற்று பிரிவில் (மித்ரா) அடிக்கடி தலைமைத்துவ மாற்றம் நிகழ்ந்து வருவதால் அந்த அமைப்பு இந்திய சமூகத்திற்கு நிறைவான சேவையை வழங்க முடியாமல் போனதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா நடப்பு தலைவருமான பி. பிரபாகரன் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அது பற்றி தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கும் தற்போதைய தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சரான டத்தோஸ்ரீ ஆர். ரமணன், இதற்கு முன்னர் மித்ராவின் தலைவராகப் பணியாற்றிய தாம் எந்தவித குறுக்கீடும் இன்றி அந்த அமைப்பிற்கு நிறைவான சேவையை வழங்கி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தமது தலைமைத்துவத்தின் கீழ் அரசு வழங்கிய 10 கோடி ரிங்கிட் மானியத்தை முழுமையாக இந்திய சமூகத்தின் நலன் கருதி பயன்படுத்தியுள்ளதாகவும் அதில் எந்தவிதமான குளறுபடியும் இல்லையென்றும் அதன் நடவடிக்கைகள் யாவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் சிறப்பான முறையிலும் நிர்வகிக்கப்பட்டதாகவும் அதன் மூலம் பயனடைந்த இந்திய தொழில் முனைவோரின் முழு பட்டியலும் வழங்கப்பட்ட நிதியும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.
இந்நிலையில் அத்திட்டம் தமது காலத்தில் தோல்வியடைந்திருப்பதாக பிரபாகரன் கூறியிருப்பது தவறு. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பொறுப்பற்ற தனமும் கூட என்றும் ரமணன் சாடியுள்ளார்.
-பொன் முனியாண்டி

