கோத்தா கெமுனிங், ஆகஸ்ட் 9 –
வேகமாக முன்னேறி வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இன்று நாம் வேலை செய்வது, கற்றல் மற்றும் தொடர்பு கொள்வது போன்ற அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் ஏற்பாட்டில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.
இங்குள்ள கெனங்கா மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில் துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் சமூக தலைவர்கள் செயற்கை நுண்ணறிவின் தினசரி பயன்பாடுகள், பல துறைகளில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் எதிர்காலத்தில் தொழில்நுட்ப அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் போன்றவை குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
“ஏஐ என்பது புதிய சொல் மட்டும் அல்ல.இது ஏற்கனவே எங்கள் வாழ்வின் ஓர் அங்கமாகியுள்ளது. இந்த கருத்தரங்கின் மூலம், கோத்தா கெமுனிங் மக்கள் இந்தத் தொழில்நுட்பத்திற்குத் தயாராக, போட்டித்தன்மை உடையவர்களாக, மற்றும் மின்னியல் யுகத்தில் முன்னணி வகிப்பவர்களாக மாற வேண்டும் ,” என்றார் பிரகாஷ் சம்புநாதன் .
நிகழ்ச்சியில் இடம் பெற்ற கலந்துரையாடல் , கேள்வி-பதில் அங்கம் போன்றவை பங்கேற்பாளர்களின் உற்சாகமான வரவேற்பைப் பெற்றன. மாணவர்கள், தொழில்முனைவோர், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் மாணவர்களிடையே தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்திருப்பதைக் காண முடிந்தது என்றார் .
இவ்வட்டார மக்களின் மேம்பாட்டிற்காக இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கல்வி மற்றும் புத்தாக்க துறையில் இவர்களின் ஆற்றலை மேம்படுத்த எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மேலும் விரிவுபடுத்தவிருப்பதாக வலியுறுத்தினார்.
இப்பயிற்சியில் இளைஞர்கள்,மாணவர்கள் என்று பல துறைகளைச் சார்ந்த 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

