சிகாமாட்:
தமிழ் மொழிக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில் சிகாமாட் மாவட்டத்திலுள்ள 14 இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு எஸ்பிஎம் தமிழ் புத்தகங்களை அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் வழங்கினார்.
யுனேஸ்வரன் ராமராஜ் தலைமையில் சிகாமாட் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் (PPD) நடைபெற்ற எஸ்பிஎம் தமிழ் பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பள்ளியிலும் இருந்து ஆசிரியர்கள் பிரதிநிதிகளாக வந்து தங்களது மாணவர்களின் சார்பாக புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் தமிழ் மொழியை கூடுதல் பாடமாகத் தொடர்ந்து தேர்வு செய்வதை ஊக்குவிப்பதற்காக இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக யுனேஸ்வரன் கூறினார்.
தமிழ் மொழியை கற்பதில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கற்றல் ஆதரவாக இப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவர்கள் மேலும் திட்டமிட்ட முறையில் மற்றும் வலுவான அடிப்படையுடன் படிக்க முடியும் என நம்புவதாகவும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் சிகாமாட், செகிஜாங் மற்றும் லாபிஸ் ஆகிய மூன்று நாடாளுமன்றங்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
சிகாமாட் நாடாளுமன்ற பகுதியில் ஏற்படும் கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

