ஷா ஆலம், நவ 19-
சிலாங்கூர் மாநிலத்தில் முஸ்லீம் அல்லாதோரின் பிரேத மேலாண்மை திட்டத்தை மாநில அரசு மறுபரிசீலனை செய்வதோடு விதிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானவையாக இருப்பதையும் உறுதிப்படுத்தும் என்று இம்மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறியிருப்பதை மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் எம். சுரேந்திரன் வரவேற்றார்.
இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பெளத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய சமயங்களுக்கான நிர்வாகக்குழு (லிமாஸ்) தலைவருமான இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
இம்மாநிலத்தில் மயான/உடல் தகன நிலைய வசதிகள் அனைத்து தரப்பினர் குறிப்பாக குறைந்த வருமானம் (பி40) பெறும் தரப்பினர் நியாயமான கட்டணத்தில் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்டவை ஆகும்.
அவ்வகையில் புதிய தகன நிலையம் அமைப்பதற்குத் தேவையான இடங்களை அடையாளம் காணும்படி அனைத்து ஊராட்சி மன்றங்களும் பணிக்கப்பட்டிருப்பதாகவும் இங் ஸீ ஹான் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் தற்போது எட்டு பொது தகன நிலையங்கள் உள்ளன. ஷா ஆலம், கிள்ளான், பெட்டாலிங் ஜெயா, சிப்பாங், மற்றும் சுபாங் ஜெயாவில் இரண்டும் செயல்பட்டு வரும் நிலையில் கோல லங்காட் மற்றும் உலு சிலாங்கூரில் இவற்றிற்கான கட்டுமானப் பணி நடைபெறுவதாக அறியப்படுகிறது.
இவ்வட்டாரங்களில் புதிதாகக் கட்டப்படும் மின் சுடலைகள் அங்குள்ள இந்தியர்களுக்கு நன்மையை அளிக்கும் என்றார் சுரேந்திரன்.

