Site icon அநேகன்

2026 சிலாங்கூர் பட்ஜெட் :மக்கள் நலனுக்கு முன்னுரிமை!ராமச்சந்திரன்

ஷா ஆலம், நவ. 27-

2026 சிலாங்கூர் பட்ஜெட் சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்திருப்பதை காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ஜூனன் பெரிதும் வரவேற்றார்.

மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் மடானி அரசாங்கம் மக்கள் மீது கொண்டுள்ள பரிவையே இத்திட்டம் பறைசாற்றுகிறது என்றார்.

மொத்தம் 3.23 பில்லியன் வெள்ளியை உட்படுத்திய இந்த பட்ஜெட்டில் சமூகம், மக்கள் நலன், கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றின் மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

காஜாங் நகராண்மைக் கழக 21ஆவது மண்டல மக்களோடு இணைந்திருக்கும் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் எனும் வகையில் இந்த பட்ஜெட்டிற்கு தாம் முழு ஆதரவு அளிப்பதாக அவர் கூறினார் .

தகுதி பெற்ற குடும்பத்திற்கு பிங்காஸ் வழி மாதம் 300 வெள்ளி உதவி நிதி,அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவீன நெருக்கடியைச் சமாளிப்பதற்கு பி40 மற்றும் எம் 40 மக்களுக்கு உதவ மாநில அரசாங்கம் மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வ திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மின்னியல் பணப்பை வாயிலாக வழங்கப்படும் இந்த உதவி நிதி உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், மருந்து வகைகள் மற்றும் கல்வி உபகரண பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அன்றாட தேவைகளை நிறைவேற்ற உதவுகிறது.

குறைந்த வருமானம் பெறுவோரில் அதிகமானோர் பிங்காஸ் அனுகூலங்களைப் பெற ஏதுவாக இவற்றைப் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு தகுதி விதிமுறைகளையும் விரிவாக்கம் காணச் செய்ய வேண்டும்.

உண்மையில் தகுதியானவர்களுக்கு இந்த உதவி சென்றடைவதை உறுதிப்படுத்த கிராம தலைவர்கள், சமூக தலைவர்கள் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் வாயிலாக பெறுநர்களின் கோட்டா நிர்ணயிக்கப்பட்ட வேண்டும்.

இந்நடவடிக்கையானது உள்ளூர் தலைவர்கள் மாநில அரசாங்கத்தின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றுவதையும் உறுதிப்படுத்தும். இது இவர்களின் அடைவு நிலையை எளிதாக மதிப்பீடு செய்வதற்கும் உதவும்.

அதே சமயம், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்களை நாம் அவசியம் கண்காணிக்க வேண்டும். மாநில அரசாங்கத்தின் இதுபோன்ற திட்டங்களின் அறிவிப்பு இந்த சட்டமன்ற அலுவலக வளாகங்களில் உள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றார்.

ஊராட்சி மன்றம், சமூகம் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பின் வாயிலாக பிங்காஸ் போன்ற உதவி திட்டங்கள் சிலாங்கூர் மக்களுக்கு பெரும் நன்மையை அளித்து வருவதை ராமச்சந்திரன் சுட்டிக் காட்டினார்.

இதன் பொருட்டு ,மாநில மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் 2026 சிலாங்கூர் பட்ஜெட்டை தாம் முழுமையாக ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.

 

Exit mobile version