Site icon அநேகன்

எச்ஆர்டி கோர்ப் உயர் அதிகாரிகள் இடைநீக்கம் ‘களை எடுத்தல்’ அல்ல, ஒரு மேம்பாட்டு நடவடிக்கை!

கோலாலம்பூர், பிப் 23 –

மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் (HRD Corp) சில உயர் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஒரு “களை எடுத்தல்” நடவடிக்கை அல்ல என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெளிவுபடுத்தினார்.

நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது, அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, தகுதியுள்ள நபர்கள் மட்டுமே அந்தப் பதவிகளை நிரப்புவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக, இடைநீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள முறைகேடு புகார்கள் குறித்த தற்போதைய விசாரணைகளை எச்ஆர்டி கோர்ப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும்; இந்த ஒட்டுமொத்த மறுசீரமைப்புப் பணிகள் மார்ச் மாத நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள நு சென்ட்ரலில் (Nu Sentral) ‘MyFutureJobs’ வேலைவாய்ப்பு ஆய்வு மையத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பிப்ரவரி 6, 21 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட இடைநீக்கங்கள் குறித்து கருத்துத் தெரிவித்தார்.

“இந்த இடைநீக்க விவகாரத்தைப் பொறுத்தவரை, அங்கு முறைகேடு நடந்ததா இல்லையா என்பது குறித்த விசாரணை முதலில் முடிவடையட்டும். நாங்கள் தற்போது மேம்பாடுகளைச் செய்து வருகிறோம். சிலர் இதனை ‘களை எடுத்தல்‘ அல்லது அது போன்ற ஒரு நடவடிக்கை என்று கூறினால், அது உண்மையில்லை. நாங்கள் தரத்தை உயர்த்தி வருகிறோம்.

Exit mobile version