Site icon அநேகன்

டிக்-டாக் நேரலையில் மிரட்டல்: ஸம்ரி வினோத்தை விசாரணை அழைக்க போலிஸ் முடிவு!

ஜோர்ஜ்டவுன், மார்ச் 11-

மதப் பேச்சாளர் முகமட் ஸம்ரி வினோத், டிக்-டாக் நேரலையில் மிரட்டல் விடுக்கும் வகையிலும், ஆத்திரமூட்டும் விதமாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, பினாங்கு மாநில போலிஸ் அவரிடம் விசாரணை நடத்த உள்ளது.

கடந்த மார்ச் 8-ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர் விரைவில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பார் என்று பினாங்கு போலிஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஸம்ரி வினோத் மீது 1948-ஆம் ஆண்டு தேசத்துரோகச் சட்டத்தின் பிரிவு 4(1), தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504 (அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவமதித்தல்) மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233(1) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலோ அல்லது இனங்களுக்கிடையே பகையைத் தூண்டும் வகையிலோ ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலிஸ் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த மார்ச் 7-ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் ஸம்ரி வினோத் ஓட்டிச் சென்ற வாகனத்திற்குச் சேதம் விளைவிக்கப்பட்டதோடு, அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்தும் போலிஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக 20 முதல் 31 வயதுடைய 6 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் பிரிவு 427 (நாசவேலை) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version