Site icon அநேகன்

மத, இன உணர்வுகளைப் புண்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, 75 அமைப்புகள் மனு!

புத்ராஜெயா:

மலேசியாவில் மத மற்றும் இன உணர்வுகளைத் தூண்டி, நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்படும் நபர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடி மற்றும் பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, 75 அரசு சாரா அமைப்புகளின் (NGO) கூட்டமைப்பு இன்று பிரதமர்துறை அலுவலகத்தில் மனுவைச் சமர்ப்பித்தது.

 

உலகளாவிய மனித உரிமைகள் அமைப்பு – GHRF முன்னெடுப்பில், புத்ராஜெயாவிலுள்ள பிரதமர் அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற அமைதியான போராட்டத்தைத் தொடர்ந்து இந்த மனு அளிக்கப்பட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், அமைப்பின் தலைவர் எஸ். ஷஷி குமார் மகஜரை அதிகாரிகளிடம் வழங்கினார்.

 

செய்தியாளர்களிடம் பேசிய ஷஷி குமார், “நாட்டின் சட்டங்கள் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஜம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங், ரிடுவான் தீ அப்துல்லா மற்றும் தமீம் டாஹ்ரி அப்துல் ரசாக் போன்றோர் தொடர்ந்து மற்ற மதங்களை இழிவுபடுத்தும் வகையிலும், இன ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இது நாட்டின் பல்லின நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயலாகும்,” என்று தெரிவித்தார்.

 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் போதிய ஆதாரங்களுடன் ஏற்கனவே பலமுறை போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்துறை அலுவலகத்தில் (AGC) இது குறித்து முறையிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண, பிரதமர் அலுவலகம், போலிஸ், உள்துறை அமைச்சு, சட்டத்துறை அலுவலகம் மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) ஆகியவற்றுடன் தங்களது கூட்டமைப்பு உடனடியாக ஒரு கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 

“எதிர்கால மலேசியா அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான நாடாகத் திகழ வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதற்காகவே இந்த மனுவை நாங்கள் ஆக்கப்பூர்வமாகவும் உறுதியாகவும் சமர்ப்பித்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

 

மாலை 3 மணிக்குத் தொடங்கி ஒரு மணி நேரம் நீடித்த இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், இனவாத மற்றும் தூண்டுதல் பேச்சுகளைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தியிருந்தனர்.

Exit mobile version