Site icon அநேகன்

அனைத்து சிறந்த SPM மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் இடங்கள் – பிபிபி வரவேற்பு

கோலாலம்பூர்:

SPM 2025 தேர்வில் 10A மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் 2026/2027 கல்வியாண்டிற்கான மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இடங்கள் வழங்கும் கல்வி அமைச்சின் முடிவை மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) வரவேற்றுள்ளது.

ஒரு அறிக்கையில், இனம் மற்றும் பின்னணி பாராது 6,717 மாணவர்களுக்கு தானாகவே சேர்க்கை வழங்கும் இந்த முடிவு கல்வியில் சமத்துவத்தை உருவாக்கும் முக்கியமான முன்னேற்றமாகும் என்று பிபிபி தெரிவித்துள்ளது.

பிபிபி தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மோகன், இந்த முடிவு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதுடன், திறமை அடிப்படையிலான கல்விக்கான கட்சியின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது எனக் கூறினார்.

“கல்வி என்பது திறமை அடிப்படையில் இருக்க வேண்டும்; இனம் அல்லது மதம் அடிப்படையாக இருக்கக் கூடாது என்பது பிபிபி நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் கொள்கையாகும். இந்த முடிவு அனைத்து மலேசியர்களுக்கும் சம வாய்ப்பை உருவாக்கும் பாராட்டத்தக்க முன்னேற்றமாகும்,” என்றார்.

மேலும், அரசு பல்கலைக்கழக சேர்க்கைகளிலும் இதே அணுகுமுறையை அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் விருப்பப் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யும் வாய்ப்பு பெற வேண்டும்.

இன அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறைமை மீளாய்வு செய்து படிப்படியாக நீக்கப்பட வேண்டும்; அதேசமயம், மதிப்பீட்டு முறை வெளிப்படையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

இத்தகைய மாற்றங்கள் திறமை மற்றும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட முன்னேற்றமான மலேசியாவை உருவாக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version