Site icon அநேகன்

தனியார் துறையிலும் ‘வீட்டிலிருந்தே பணி’ முறை: மனிதவள அமைச்சர் ரமணன் வலியுறுத்தல்

கோலாலம்பூர்:

மலேசியாவின் பொதுத்துறையில் அமல்படுத்தப்பட்டுள்ள ‘வீட்டிலிருந்தே பணிபுரியும்’ (BDR) திட்டத்தைப் பின்பற்றி, தனியார் துறையினரும் இத்தகைய நெகிழ்வுத்தன்மை கொண்ட பணிச்சூழலை உருவாக்க முன்வர வேண்டும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற ‘வேலை, ஊதியம் மற்றும் எதிர்காலம்’ எனும் வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

செயல்பாட்டுச் செலவு மற்றும் மானியச் சேமிப்பு
நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்து மற்றும் தினசரி செயல்பாட்டுச் செலவினங்களைக் குறைப்பதற்கு இம்முறை பெரும் துணையாக இருக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“இதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் அரசாங்க எரிபொருள் மானியங்களை, நாட்டின் மிக அத்தியாவசியமான பிற தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும்,” என அவர் மேலும் விளக்கமளித்தார்.

திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய முக்கிய நாட்களைத் தவிர்த்து, வாரத்தில் எஞ்சியுள்ள மூன்று நாட்களை வீட்டிலிருந்தே பணியாற்றும் நாட்களாகத் தனியார் நிறுவனங்கள் அறிவிக்கலாம் என அவர் ஆலோசனையை முன்வைத்தார்.

பல வங்கி மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதையும் அவர் உதாரணமாகக் காட்டினார்.

வீட்டிலிருந்தே பணிபுரிவதால் உற்பத்தித்திறன் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தைப் போக்கிய அமைச்சர், ஊழியர்களைக் கண்காணிக்க ‘Spot Me’ எனும் நவீன செயலி பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிட்டார்.

இச்செயலி மூலம்:-
• ஊழியர்களின் இருப்பிடம் மற்றும் பணி நிலை துல்லியமாக அறியப்படும்.
• ஒவ்வொரு ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை ஊழியர்கள் தங்கள் பணி குறித்த மேம்படுத்தல்களை (Updates) வழங்க வேண்டும்.
• ஊழியர்களின் மெத்தனப் போக்கைத் தவிர்க்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இக்கண்காணிப்பு முறை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைக் கையாள, மலேசிய அரசு நேற்று முதல் பொதுத்துறை ஊழியர்களுக்கு இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

அலுவலகத்திலிருந்து 8 கி.மீட்டருக்கு அப்பால் வசிக்கும் ஊழியர்களுக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version