பெட்டாலிங் ஜெயா:
பெட்டாலிங் ஜெயாவில் செயல்பட்டு வரும் இந்தியா கேட் உணவகத்தின் கிளைக்கு மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்) இன்று ஹலால் சான்றிதழை வழங்கியது.
இதற்கு முன்னதாக, இந்தியா கேட்டின் மத்திய சமையலறை ஹலால் சான்றிதழைப் பெற்றிருந்த நிலையில், தற்போது பெட்டாலிங் ஜெயா கிளைக்கும் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இதன் மூலம் மலேசியாவில் ஹலால் சான்றிதழைப் பெற்ற முதல் இந்திய ஃபைன்-டைனிங் உணவகம் என்ற பெருமையை இந்தியா கேட் பெற்றுள்ளது.
தொடர்ந்து மற்ற கிளைகளுக்கும் ஹலால் சான்றிதழைப் பெறும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்தியா கேட் நிறுவனர் சரவணன் தெரிவித்தார்.
ஹலால் சான்றிதழ் என்பது முஸ்லிம் சமூகத்துடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்றும், உணவு தயாரிப்பு முறையில் சுத்தம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்கிய அங்கீகாரம் என்றும் அவர் கூறினார்.
ஹலால் சான்றிதழ் பெறும் நடைமுறையில் சுமார் 80 விழுக்காடு முக்கியத்துவம் சமையலறையின் தூய்மைக்கு வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பான உணவை வழங்க முடியும் என்றும் சரவணன் தெரிவித்தார்.
மேலும், ஹலால் சான்றிதழ் மூலம் உணவகத்தின் வர்த்தக வாய்ப்புகள் 30 முதல் 40 விழுக்காடு வரை அதிகரிக்கக்கூடும் என்றும், குறிப்பாக மலாய் வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்க இஃது உதவும் என்றும் அவர் கூறினார்.
மற்ற இந்திய உணவகங்களும் ஹலால் சான்றிதழைப் பெற முன்வர வேண்டும் என்றும், அதன் மூலம் புதிய வாடிக்கையாளர் சந்தையை உருவாக்க முடியும் என்றும் இந்தியா கேட் நிறுவனர் சரவணன் கேட்டுக் கொண்டார்

