Site icon அநேகன்

அரசுப் பணியில் சேர விரும்பும் சிகாமாட் வாழ் இந்திய இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

சிகாமாட்:

இந்திய இளைஞர்கள் பொதுச் சேவைத் துறையில் அதிகளவில் இணைவதை ஊக்குவிக்கும் நோக்கில் Program Jalinan Mesra Bersama Masyarakat Segamat, Johor என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி ஜூலை 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 8 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை ஜெமெந்தா பல்நோக்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

புத்ராஜெயா இந்திய அரசு ஊழியர்கள் சங்கம், இமையம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் மாண்புமிகு யுனேஸ்வரன் ராமராஜ் ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

பொதுச் சேவைத் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்குத் தொழில்வாய்ப்பு வழிகள், விண்ணப்பத் தேவைகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள், பொதுச் சேவைத் தேர்வுகளுக்குத் தயாராகும் முறை, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கப்படவுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியில் மலேசிய பொதுச் சேவை ஆணையத்தின் ஆணையர் திரு. எஸ். லெட்சுமணன் சண்முகம், சுகாதார அமைச்சின் துணைச் சுகாதாரப் பணிகள் பிரிவின் உதவி இயக்குநர் திரு. சரவணக்குமார் மணியம் ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு, அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு நேரடியாக வழிகாட்டவுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகள், எஸ்.பி.எம். முடித்த இளைஞர்கள் மற்றும் அரசுப் பணியில் இணைய ஆர்வமுள்ள இந்திய இளைஞர்கள் இவ்வாய்ப்பைத் தவறவிடாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Exit mobile version