Site icon அநேகன்

மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பயிற்சி ஆசிரியர் மீது 6 குற்றச்சாட்டுகள்

ஈப்போ:

14 வயது 3 மாதங்கள் கொண்ட தனது ஆண் மாணவனுக்கு எதிராக பாலியல் தொந்தரவு செய்ததாக சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட 25 வயதுடைய பயிற்சி ஆசிரியர் ஒருவர், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டபட்டார்

அவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

முகமது மிஃப்த்ஸால் முகமட் சலானி ஷாம்( வயது 25) என்பவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிபதி ஐனுல் ஷஹ்ரின் முகமட் முன்னிலையில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்த மறுப்பை பதிவு செய்தார்.

குற்றப்பத்திரிகையின்படி, கடந்த ஜூலை 5 ஆம் தேதி அதிகாலை 1.00 மணி முதல் காலை 7.26 மணி வரை, ஈப்போ கம்போங் செக்காடியில் உள்ள பெர்சியாரான் குந்தோங. (S) 1/9 பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில், மாணவனுக்கு எதிராக பாலியல் நோக்கத்துடன் ஆறு முறை உடல்ரீதியான பாலியல் தொல்லை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவற்றில் ஐந்து குற்றச்சாட்டுகள், 2017 ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் (சட்டம் 792) பிரிவு 14(அ)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அதே சட்டத்தின் பிரிவு 16-ன் கீழ் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பிரம்படி தண்டனையும் விதிக்கப்படலாம்.

மற்றொரு குற்றச்சாட்டு, அதே சட்டத்தின் பிரிவு 14(ஆ)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கும் அதே தண்டனை விதிக்கப்படும்.

அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஒரு ஜாமீன்தாரருடன் ரிங்கிட் 10,000 ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒவ்வொரு மாதமும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவரை எந்த வகையிலும் தொடர்புகொள்ளவோ அல்லது தொந்தரவு செய்யவோ கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

வழக்கின் ஆவணங்கள் ஒப்படைக்கப்படுவதற்காக, அடுத்த விசாரணை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் எம். ரவீனா ஆஜரானார். குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் அமீர் ஃபிர்தௌஸ் முகமட் அமீர் ஆஜராகினார்.

Exit mobile version