ஈப்போ, ஜூலை 29 —
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி, எதிர்காலத் திட்டமிடல் மற்றும் முன்னாள் மாணவர் சங்கங்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவை (PERTAMA) ஏற்பாட்டில் 17-வது ஆண்டு தேசிய பேராளர் மாநாடு 2026 நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ்க்கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவரும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு PERTAMA அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.
இம்மாநாடு வரும் 02.08.2026 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பேராக், ஈப்போவில் உள்ள Urban Transformation Centre (UTC) பிரதான கூட்ட அறையில் நடைபெறவுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாடு, தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் எதிர்காலப் பயணம், புதிய செயல்திட்டங்கள் மற்றும் தமிழ்க்கல்வி மேம்பாட்டிற்கான முக்கிய அணுகுமுறைகள் குறித்து கலந்துரையாடப்படும் உயர்மட்ட சந்திப்பாக அமையும்.
மாநாட்டில் தேசிய அளவிலான பிரதிநிதிகளின் பங்கேற்பு, புதிய முன்னெடுப்புகள், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள், முன்னாள் மாணவர் சங்கங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன.
இம்மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் விஜய் வேலாயுதம் கூறுகையில், “தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியும், அடுத்த தலைமுறையின் கல்வி முன்னேற்றமும் நமது ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் தொடர் செயல்பாடுகளிலேயே உள்ளது. எனவே, அனைத்து முன்னாள் மாணவர் சங்கங்களும், தமிழ்க்கல்வி மீது அக்கறை கொண்ட சமூக அமைப்புகளும் பொதுமக்களும் இம்முக்கியமான தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு தங்களின் ஆதரவையும் பங்களிப்பையும் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்
தமிழ்ப்பள்ளிகளின் கல்வித் தரம், மாணவர் நலன், தலைமைத்துவ வளர்ச்சி மற்றும் முன்னாள் மாணவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில் PERTAMA தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்தப் பயணத்தில் 17ஆவது தேசிய பேராளர் மாநாடு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சி குறித்து மேலும் விவரங்கள் அறிய இம்மாநாட்டின்
ஏற்பாட்டுக் குழுத் தலைவர் விஜய் அவர்களை 012-5226321 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

