புக்கிட் ஜாலில்:
உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திரைப்படமான இரும்புத் தோட்டம் திரைப்படத்தின் கலா பிரிமியர் நிகழ்ச்சி ஆகஸ்ட் 3-ஆம் தேதி, டிஜிவி புக்கிட் ஜாலில் பேவிலியனில் (TGV Pavilion) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரைப்படத்தின் நடிகர் இர்ஃபான், இயக்குநர் ஜெய்தேவ் ஜெயக்குமார், படக்குழுவினர், திரைப்படக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு திரைப்படத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படம், மலேசியத் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்பாக அமையும் என்ற நம்பிக்கையை நடிகர் இர்பான் வெளிப்படுத்தினார். தரமான மலேசியத் தமிழ் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இரும்புத் தோட்டம்’ வெறும் பொழுதுபோக்குத் திரைப்படம் அல்ல என்றும், தனது வாழ்க்கையில் நேரில் கண்ட உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படைப்பு என்றும் இயக்குநர் ஜெய்தேவ் ஜெயக்குமார் தெரிவித்தார். குடும்பங்கள், குறிப்பாக பெற்றோர்களிடையே முக்கியமான உரையாடலை உருவாக்கும் திரைப்படமாக இது அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
‘இரும்புத் தோட்டம்’ உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு குற்றப் புலனாய்வு திரைப்படமாகும்.
15 வயது மாணவி ஒருவர் எதிர்பாராத விதமாகக் காணாமல் போவதிலிருந்து கதையின் விசாரணை தொடங்குகிறது. அந்த விசாரணையின் போது வெளிவரும் மறைக்கப்பட்ட ரகசியங்கள், எதிர்பாராத உண்மைகள், மர்மம் மற்றும் உணர்வுபூர்வமான திருப்பங்களுடன் கதை நகர்கிறது.
இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில், பிள்ளைகளின் மனநிலையையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பெற்றோர் புரிந்துகொள்வதன் அவசியத்தையும், அவர்களுடன் திறந்த மனதுடன் உரையாடுவதன் முக்கியத்துவத்தையும் இத்திரைப்படம் வலியுறுத்துகிறது.
‘இரும்புத் தோட்டம்’ திரைப்படத்திற்கு சமேஷன் மணிமாறன் இசையமைத்துள்ளார். சமூக அக்கறையும் விறுவிறுப்பான குற்றப் புலனாய்வுக் கதைக்களமும் இணைந்துள்ள இப்படம், மலேசியத் தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

