கிள்ளான்:
துஜூ (TuJu) தடங்காட்டி செயலி தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, அதற்குப் பதிலாகப் புதிய உள்நாட்டு தடங்காட்டி செயலியை உருவாக்கத் திறந்த ஒப்பந்தப்புள்ளி நடத்த வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் வலியுறுத்தியுள்ளார்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் முன்வைத்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த அவர், துஜூ திட்டத்தின் செலவுகள், ஒப்பந்தம் வழங்கப்பட்ட நடைமுறை மற்றும் புரோசிக்னல் கன்சோர்டியம் சென். பெர்ஹாட் (PCSB) நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களை அரசாங்கம் வெளிப்படையாக விளக்க வேண்டும் என்றார்.
மேலும், மலேசியத் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்குப் போட்டியிட நியாயமான வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய செயலியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு முன், அதன் துல்லியம், போக்குவரத்துத் தகவல்கள், இணையப் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றைச் சுயாதீனமாகச் சோதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கிரேடில் ஃபண்ட் (Cradle Fund), மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (MDEC) போன்ற அமைப்புகளின் நிதியுதவித் திட்டங்களைப் பயன்படுத்தி, தகுதியுள்ள மலேசியத் தொடக்க நிறுவனங்கள் புதிய செயலிகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் அரசாங்கம் ஆராய வேண்டும் என்றார்.
திறந்த ஒப்பந்தப்புள்ளி, வெளிப்படையான செலவினம், நியாயமான போட்டி மற்றும் நிரூபிக்கப்பட்ட செயல்திறன் ஆகியவை அரசாங்கத்தின் ஒவ்வொரு தொழில்நுட்பத் திட்டத்திலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கணபதிராவ் வலியுறுத்தினார்.

