Site icon அநேகன்

தீபாவளியை முன்னிட்டு 11,888 கூடுதல் இருக்கைகளை வழங்குகிறது KTMB

கோலாலம்பூர், அக். 26 – தீபாவளி பெருநாளை முன்னிட்டு, நவம்பர் 5 முதல் 9ஆம் தேதி வரை ETS மற்றும் EMUPlus ரயில் சேவைகள் மூலம் 11,888 கூடுதல் இருக்கைகளை வழங்குவதாக மலேசிய ரயில் சேவை நிறுவனம் (KTMB) அறிவித்துள்ளது.

பயணிகளின் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யவும், சொந்த ஊர்களுக்குச் செல்வோர் மற்றும் குடும்பத்துடன் பயணம் செய்வோருக்குக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பாடாங் பெசார்–கேஎல் சென்ட்ரல் வழித்தடத்தில் நவம்பர் 5 முதல் 9ஆம் தேதி வரை தினமும் இரண்டு கூடுதல் ETS சேவைகள் இயக்கப்படும். இதன் மூலம் 3,160 கூடுதல் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இதற்கான பயணச்சீட்டு விற்பனை அக்டோபர் 27ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கும்.

இதற்கிடையில், ஜொகூர் பாரு சென்ட்ரல்–கேஎல் சென்ட்ரல் வழித்தடத்தில் நவம்பர் 6 முதல் 9ஆம் தேதி வரை தினமும் நான்கு கூடுதல் ETS சேவைகள் இயக்கப்படும். இதன் மூலம் 5,056 கூடுதல் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இந்த வழித்தடத்திற்கான பயணச்சீட்டு விற்பனை செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

மேலும், பண்டார் தாசேக் செலத்தான்–ஈப்போ–கிள்ளான் வழித்தடத்திலும், எதிர்த்திசையிலும், குறிப்பிட்ட நாள்களில் நான்கு கூடுதல் EMUPlus சேவைகள் இயக்கப்படும். இதன் மூலம் 3,672 இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இதற்கான பயணச்சீட்டு விற்பனையும் அக்டோபர் 27ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கும்.

மொத்தம் 11,888 கூடுதல் இருக்கைகள் மூலம், தீபாவளி காலத்தில் நகரங்களுக்கு இடையிலான ரயில் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய KTMB நடவடிக்கை எடுத்துள்ளது.

Exit mobile version