Site icon அநேகன்

தமிழ் ஊடகவியலாளர்களுக்கான தீபாவளி விருந்துபசரிப்பு! ஜசெக தலைமையகம் ஏற்பாடு

பெட்டாலிங் ஜெயா, அக்.28-

தீபத்திருநாளையொட்டி ஜசெக தலைமையகம் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியது.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ இன், கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராயுடு, புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷாகரன், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன், செனட்டர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜசெகவின் நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தமிழ் அச்சக மற்றும் மின்னியல் ஊடகத் துறையினர் அளப்பரிய பங்காற்றி வருவதை நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் பாராட்டினார்.

இவ்விரு தரப்பினருடனான பரஸ்பர உறவு மக்களுக்கும் கட்சிக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் பாலமாகத் திகழ்கிறது
என்று இயோ பீ இன் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களின் நலனுக்காக தொடர்பு அமைச்சு பல்வேறு நிதியுதவி திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் இவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இத்தரப்பினரை தொடர்பு துணையமைச்சருமான தியோ நீ சிங் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் மின்னியல் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version