Site icon அநேகன்

மாணவனிடம் ஆசிரியர் அத்துமீறல்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கோலாலம்பூர், 31 அக்டோபர் :

பகாங், ஜெராண்டுட்டில் உள்ள தமிழ்ப்பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு மாணவனிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் ஆசிரியர் மீது கல்வி அமைச்சு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு சார்பற்ற அமைப்பினரும் அப்பகுதி மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய ஆசிரியர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர்கள் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் கடந்த சில மாதங்களாகவே அம்மாணவனிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆசிரியர் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த சூசை தோமஸ் தெரிவித்தார்.

ஆசிரியர்களை நம்பியே பெற்றோர் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். இத்தகைய சூழலில், மாணவர்களிடம் ஆசிரியர்கள் அத்துமீறி நடந்துகொள்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அப்பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

தற்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் நிலவும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றைக் களைய வேண்டும் என்றும், பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்துவது குறித்தும் ஆராய வேண்டும் என்றும் சூசை தோமஸ் வலியுறுத்தினார்.

மேலும், போலீஸ் விசாரணையுடன் நின்றுவிடாமல், கல்வி அமைச்சும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மாணவர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Exit mobile version