கோலாலம்பூர், நவம்பர் 20:
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இலக்கியப் பங்களிப்பு, சமூகச் சிந்தனைகள் மற்றும் சீர்திருத்தக் கருத்துகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில், ‘பாரதியார் – நேற்று, இன்று, நாளை’ எனும் தலைப்பிலான மாபெரும் விழா வரும் டிசம்பர் 19ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் அமைந்துள்ள மசீச மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கத்தின் ஆதரவுடன், மக்கள் முற்போக்குக் கட்சியின் (பிபிபி) இளைஞர் அணி இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தேசிய இளைஞர் அணித் தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்தார்.
இவ்விழாவில் மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். அதேபோல், மலாயா பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவர் இருக்கையைச் சேர்ந்த முனைவர் டாக்டர் ஏ. செல்லப்பெருமாளும் பங்கேற்கவுள்ளார்.
மகாகவி பாரதியாரின் 144ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் சுமார் 2,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சத்யா கூறினார்.
பெண் உரிமை, விதவை மறுமணம், சாதிய ஒழிப்பு உள்ளிட்ட சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைத் தனது எழுத்துகள் மற்றும் கவிதைகள் வாயிலாகத் தொடர்ந்து வலியுறுத்திய பாரதியாரின் சிந்தனைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்ப்பதே இவ்விழாவின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பள்ளி மற்றும் உயர்கல்வி மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் ஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளி மற்றும் உயர்கல்வி மாணவர்கள் என மூன்று பிரிவுகளாகக் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்குப் பணப் பரிசுகளும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பிபிபி தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் பங்கேற்கும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சத்யா, பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறும் அழைப்பு விடுத்தார்.
இன்று பிபிபி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் பிபிபி மகளிர் அணித் தலைவி புனிதா முனுசாமி உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

