(ஜெயமோகன் பாலசந்திரம்)

மொழியை வெறும் தொடர்பு சாதனமாகப் பார்ப்பதுதான் நாகரீகம் என்று நம் மூளையில் பதித்துவிட்டனர். ஆனால், மொழியென்பது அதற்கும் மேலானது என்பதனை அனைவரும் புரிந்து கொண்டால் சிறப்பு.

1. நெருப்புக்குப் பிறகு மனிதன் கண்டுபிடித்த அதிதொழில்நுட்பமானது மொழியாகத்தான் இருக்க முடியும். ஒரு மொழியானது வெறும் ஓசைகளும் ஒலியன்களும் மட்டும் என்று நினைத்தால் அதைவிட பேதைத்தனமானது எதுவுமில்லை.

2. மொழி ஒர் இனத்தின் அடையாளம். அதோடு முடிந்துவிடவில்லை, ஓர் இனத்தின் வரலாறும்கூட. எல்லா ஆதீக்கவாதிகளும் அவர்கள் மொழி நிலைக்க வேண்டுமென்பதற்காக வென்ற நிலங்களில் அவரவர் மொழியையே நிறுவினர். பிரபல மதங்கள்கூட இறைவனைக் குறிப்பிட்ட மொழியில்தான் வழிபட வேண்டுமென்று சட்டத்தையெல்லாம் ஏற்றினர்.

3. அதையும் தாண்டி வேற்றுமொழி வழிபாடு செல்லாது என்றும் கதை கட்டிவிட்டு குளிர் காய்ந்தனர். உதாரணமாக, தமிழ் நீசமொழியாம் (இது மற்றுமொரு பெரிய தலைப்பு…) இப்படி சில பிரபல மதங்களும் மதவாதிகளும் அவர்களோடு தன்னிலை மறந்தவர்களும் இன்றளவிலும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு மொழியைத் தாழ்த்தியும் ஒரு மொழியை உயர்த்தியும் கோளாறு செய்து வருகின்றனர்.

4. இவ்வாறு ஒவ்வொரு தாய்மொழிக்கும் ஏதோ ஒருவிதத்தில் ஆபத்து ஏற்பட்டது. பல்லாண்டு காலமாக உலக மொழிகளில் சில மொழிகளை அழித்த பெருமை ஆங்கிலத்துக்கு கண்டிப்பாகச் சேரும். ஆதிக்கவாதிகள் இதற்கு காரணம் என்றால் அதில் சரிபாதி பங்கு அடிமைப்புத்தி கொண்டவர்களுக்கும் உண்டு.

5. இனி மலேசியாவில் நடப்பதைப் பார்ப்போம். மலேசியாவில் பல்லின மக்கள் வாழ்கிறோம். இங்கு நான்கு மொழிகள் அதிகமாகப் பேசப்படுவதாக அனைவரும் நம்புகிறோம். ஆனால், அவற்றைத் தாண்டி நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் ஓட்டுமொத்த மலேசியாவில் பேசப்படுகின்றன. அவற்றுள் இந்திய மொழிகள் பிரிவில் எட்டு மொழிகளும் அடங்கும்.

6. 1969 கலவரத்திற்குப் பிறகு, நாட்டின் அனைத்து தரப்பிலும் அதிகாரப்பூர்வமான மொழியாக மலாய்மொழி இடம் பிடித்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் மலாய்மொழி பயன்பாட்டிற்கென்று தனிப்பிரிவு அமைக்குமளவுக்கு மலாய்மொழி மலேசியாவில் பெருமைப்படுத்தப்பட்டது. இன்று, மலாய் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளாக மலேசியாவும் புருணையும் விளங்குகிறது. புருணை மலேசியாவைத் தவிர்த்து தென்னாப்பிரிக்காவில் இருக்கும் கேப் டவுன் (CAPETOWN,SOUTH AFRICA) என்னுமிடத்திலும் இன்றும் மலாய்மக்கள் வாழ்கின்றனர். அரசியல் கைதிகளாகவும் டச் எதிர்ப்பாளர்களாகவுமிருந்த மலாய் தேசியவாதிகள் அடிமைகளாக டச் கிழக்கு இந்திய கம்பேனியால் அங்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்று அவர்களுடைய மலாய்மொழி பயன்பாடு பெருமளவு குறைந்திருந்தாலும் மொழிப்பற்று மிக்கவர்கள் அதனைத் தூக்கிபிடித்தே வருகின்றனர். மலாய் பாரம்பரியமும் அங்கு காக்கப்பட்டு வருகிறது.

6. இன்றளவில் மலாய்மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் மலாய் மொழியினை மதிப்பதில்லை. அதற்கு காரணம் கேட்டால்

-அதெல்லாம் ஒரு மொழியா?
-அது பல மொழிகளின் கூட்டு தானே
-வெளிநாட்டில் மலாய் சோறு போடுமா?
-மலேசியாவிற்குள் மட்டும்தான் மலாய்க்கு மவுசு அதிகம்
-மலாயில் பேசுவது ‘standard’ ஆக இருக்காது.

7. மலாய்மொழிமீது எதற்கு இதுபோன்ற வன்மம் என்று தெரியவில்லை. மலாய்மொழியின் சரித்திரமும் பழமை வாய்ந்ததுதான். அதன் பழமையை விளக்க வேண்டுமென்றால் கி.மு காலத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம்கூட ஏற்படலாம். போர்த்துகீசியரின் வருகையின்போது மலாய்மொழிதான் மாலுமிகளுக்கும் வியாபாரிகளுக்கும் Lingua Francaவாக (பொது மொழி) செயல்பட்டது. 1700களின் தொடக்கத்தில் “ஆங்கிலம் மலேயோ அகராதி” (A DICTIONARY, ENGLISH AND MALAYO) தாமஸ் பவுரியால் வெளிடப்பட்டது. இன்று அந்த அகராதி பேராக் மாநிலத்திலுள்ள தஞ்சுங் மாலிமில்தான் உள்ளது. அப்படியிருக்க ஏன் மலாய் ஒரு ‘famous’ ‘glamour’ மொழியாக இருக்கவில்லை?

8. அதற்கு முக்கியமான நான்கு காரணங்கள்.

-தொடர்ச்சியான படையெடுப்பும் (வெவ்வேறான காலக்கட்டத்தில்) அதனால் ஏற்பட்ட மொழிச்சிதைவு
-மலாய் மக்கள் மலாய்த் தீவுகளைத் தாண்டி ஆட்சியை விரிவுபடுத்தவில்லை. அதனால் அவர்களின் மொழி பிற பிராந்தியங்களில் ஆதிக்க மொழியாகவில்லை
-உலக நாடுகளின் துறைமுகமாக விளங்கியதால் ஏற்பட்ட மக்கள் கலப்பு
-மலாய்மக்கள் இசுலாம் மதத்தைத் தழுவியதால் அரபிமொழியின் தாக்கம்

9. இதுவெல்லாம் ஒருபுறமிருக்க காலனித்துவ காலத்தில் ஆங்கிலம் கோலோச்சி இருந்ததால் நம் மலாய் நாடானது ஆங்கிலத்திலேயே செயல்பட்டது. அதன்பின்னர் சுதந்திரம் பிறந்தவுடன் மலாய்மொழிக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது. இப்போது நாம் பயன்படுத்தும் மொழி பல அடி உதைகள் வாங்கி கலப்புக்கும் சிதைவுக்கும் ஆளாகி புதிதாக மலர்ந்த மலாய்மொழி.

10. காலனித்துவ காலத்தில் சீனா, இந்தியா (தென்னகம்), போன்ற நாடுகளிலிருந்து அதிகமான மக்கள் மலாய் மண்ணுக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்களும் இங்கு நூற்றாண்டு காலம் தங்கி புலம்பெயர்ந்ததால் அவர்களின் மொழி தாக்கமும் மலாய்க்கு ஏற்பட்டது.

11. இதையெல்லாம் கவனித்த மலாய்க்காரர்கள், மலாய்மொழியை விட்டுத்தரக்கூடாது என்று அவர்களுடைய நாட்டின் ஆட்சிமொழியாக ஆக்க சுதந்திரத்தின் போது முடிவெடுத்தனர். இதற்கு அக்காலத்தில் மலாயாவில் வாழ்ந்த சிறுபான்மையில் பெரும்பான்மை வகித்த சீனர்களும் தமிழர்களும் ஒரு மனத்தாக ஒப்புக் கொண்டனர். சபா சராவா (போர்னியோ) இணையும்போது அரசியலமைப்புச் சட்டத்தைச் செயல்படுத்தி மலேசிய அரசியமைப்புச் சட்டமாக அமலாக்கத்திற்குக் கொண்டு வந்தனர்.

12. ஆனாலும், மற்ற மொழி ஆதிக்கவாதிகளைப் போல மலாய்மக்கள் அக்காலத்தில் நடந்து கொள்ளாதது வியப்புக்குரியதுதான். மலேசியாவில் மலாய் அதிகாரப்பூர்வ மொழி, ஆட்சி மொழி மற்றும் வழக்காடு மொழி. எனினும், பிற மொழி பயன்படுத்துவதற்கு எத்தடையும் இல்லை. இதனை விரிவாக PERKARA 152இல் காணலாம். இதனை எளிதாக சொல்ல வேண்டுமானால் மலேசியாவில் எல்லா இடத்திலும் மலாய்மொழியைப் பயன்படுத்தலாம், பிற மொழியை அதிகாரப்பூர்வ செயல்பாடுகளின்றி ஏனைய பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். அதுபோக, தமிழ்மொழியும் சீனமொழியும் தாய்மொழி பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் மொழியாகப் பயன்படுத்தலாம். இன்று மேலும் சில மொழிகள் பள்ளியில் கற்பிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஈபான், கடாசான்டூசுன் மொழிகள்.

13. வழக்காடு மொழியென்று எடுத்துக் கொண்டால், மலாய்தான் வழக்காடு மன்றங்களில் பயன்படுத்த (வாதாட) வேண்டிய மொழி. ஆங்கில மொழியில் வழக்காட வேண்டுமென்றால் நீதிமன்றத்திடம் சட்டப்பூர்வமாக ஒப்புதல் வாங்கியிருக்க வேண்டும். நாடாளுமன்றத்திலும் அனுமதி வழங்கப்பட்ட பின்னரே ஆங்கிலத்தில் உரையாற்றலாம். கல்வித்துறையில் எடுத்துக் கொண்டால், மலேசிய கல்வி சான்றிதழ் சோதனையில் மலாய்மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அச்சான்றிதழ் செல்லும். இல்லையேல், மேற்கல்வி தொடர்வது சுலபமான காரியமல்ல. அதுமட்டுமின்றி, மலாய்மொழி துன் மகாதீர் காலத்தில் ஒற்றுமைக்கான மொழியாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தான்ஶ்ரீ முகிதின் யாசின் கல்வியமைச்ச்சராக இருந்த காலத்தில் மலாய்மொழியை அங்கிகரித்து கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக மலேசியக் கல்வித் திட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்பட்டது.

14. மலாய்மொழியின் பெருமைகளையும் நாட்டில் அதன் முக்கியத்துவத்தையும் பார்த்தோம். ஆனாலும், அம்மொழியை இரண்டாம் மொழியாகவோ மூன்றாம் மொழியாகவோ கற்பவர்கள் அதனை விரும்புவதில்லை. சீன மொழி, தமிழ்மொழி, அரபுமொழி போன்று மலாய்மொழி கடினமான மொழியல்ல. ஆங்கிலத்தோடு ஒப்பிட்டாலும் அது சுலபமான மொழிதான். எளிய இலக்கண அமைப்பு, ஆங்கில (ரூமி) எழுத்துரு கொண்டது மலாய்மொழி. பேசுவதற்கும் சுலபமானதுதான். அப்படியிருக்க மக்கள் விரும்பாததற்கு காரணம் அலட்சியப்போக்கும் மெத்தனப்போக்கும்தான். மலேசியாவில் ஆங்கிலத்தை வெள்ளைக்காரனைப் போல் பேசுவோம், ஆனால் தேசிய மொழியான மலாய்மொழியை படுமோசமாகவே பேசுவோம்! அடிமைப்படுத்திய மொழியைவிட இந்நாட்டின் மலாய்மொழி கசந்த மொழியல்ல என்பது என் கருத்து.

15. உடனே, ஒரு கேள்வியெழும். அயல்நாட்டில் மலாய்மொழியை வைத்து என்ன செய்வதென்று! ஒரு எளிமையான செய்தியைக் கூறுகிறேன். பெரும்பாலான நாடுகளில் அவர்கள் மொழியை கற்றால்தான் பிழைப்பு நடக்கும். ஆங்கிலத்தைவிட உள்நாட்டு மொழிகளுக்கு மட்டுமே மதிப்பு. ஐரோப்பிய நாடுகளுக்கும் சில ஆசிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வோருக்கு இது தெரியும். ஒருவேளை, அது போன்ற நாடுகளில் வேலை கிடைத்தால் அந்நாட்டு மொழியைத் திறம்பட கற்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும்போது உள்நாட்டு மொழியைக் கற்பதில் என்ன சிக்கல்?

16. நாட்டை உருவாக்கினோம் என்று மார்தட்டுகிறோம். ஆனால், பிழைப்புத் தேடி வந்த பங்களாதேசிகள், நேப்பாளிகள், பர்மாகாரர்களைவிட மோசமான மலாய்மொழியைத்தான் பேசுகிறோம். இந்தக் குறையை ஏற்றுக் கொள்ள பக்குவமில்லாதவர்களுக்குத்தான் மலாய் தேவையற்ற மொழியாக இருக்கும்!! அதில் பெரும்பாலான தமிழர்களுக்கு தாய்மொழிமீதே அக்கறை இருக்காது, எங்கிருந்து தேசியமொழிமீது அக்கறை வரும்?

17. புதிய மலேசியா, புதிய மலேசியன் என்று பெருமைப்படுவதைக் குறைத்து கொண்டு சிறப்பாக மலாய் பேசும் ஆற்றலை வளர்க்கலாம். நான் மலேசியன் என்று கூறிக்கொண்ட பல அரசியல் தலைவர்களுக்கு (மலாய்க்காரர்கள் அல்ல) மலேசிய மொழியான மலாய்மொழியே சரியாகப் பேசத்தெரியாதது ஒரு பெரும் குறையே!

18. மலாய்மொழி தெரியததால் குடியுரிமை கிடைக்க நமது முன்னோர்கள் கொஞ்சநஞ்ச சிரமத்தை எதிர்நோக்கவில்லை. அந்த நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளைவிட கேலிகளே அதிகம். அது புரியாமலும்கூட சிணுங்கி “யா, யா” என்று குடியுரிமை பெற்றவர்கள் உண்டு. அப்படியிருந்தும் அதன் முக்கியத்துவம் உணராமல் அடுத்த தலைமுறையை அவர்கள் கைவிட்டதுதான் வேதனையானது.

19. மலேசியாவில் தமிழ்த்தேசியம் பேசுபவர்கள்கூட (சிலர்) மலாய்மொழியை மலாய்மக்கள் பாதுகாக்க நினைப்பதை ஏளனமாகப் பார்ப்பது உண்டு. தமிழ்த்தேசியம் வேண்டுவோர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மைப் போல் அவர்கள் மலாய்தேசியத்தை அழுத்திப் பிடித்தால் நமக்கு ஆபத்து என்பது உறுதி. அதே நேரத்தில் நம்மைப் போன்று அவர்களுடைய மொழி வளர்ச்சிக்கு அவர்கள் போராடுவதை நாம் குறைக்கூற முடியாது.

20. நாம் அரசாங்கத்தில் வேலை செய்கிறோமோ அல்லது தனியர் துறையில் வேலை செய்கிறோமோ, ஆனால், கண்டிப்பாக மலாய்மொழியை குறைந்தபட்சம் முறையாக பேச கற்றுக் கொள்ள வேண்டும். நம் குழந்தைகளிடையே அதனை வலியுறுத்த வேண்டும், கடினமான ஆங்கிலத்தை சரியாக பேசும் நாம், சுலபமான மலாய்மொழியைத் தவறாகப் பேசுகிறோம் என்றால் அது நம்முடைய இயலாமையையே ஆகும். .

தமிழர்களாக (யாராக இருந்தாலும்) இம்மண்ணில் பிறந்தவர்கள் முதலில் தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பின்னர், தேசியமொழியைப் பிழையின்றி பேச/எழுத தெரிந்திருத்தல் அவசியம். மலேசியத் தமிழர்களுக்கு ஆங்கிலம் ஒரு சிக்கல் கிடையாது. சுலபமாக கற்றுக் கொள்வோம் (தமிழ்ப்படமே நமக்கு ஆங்கிலத்தை கற்றுக் கொடுத்துவிடும்). இம்மும்மொழியினையும் கற்று சிறப்புடன் வாழ்வோம்.

மலாய்மொழி தெரியாமல் மலேசியாவில் வாழ முடியும். ஆனால், மலேசியனாக வாழ முடியுமா என்பது கேள்விக்குறி. மலாய்மொழியின் பெருமையையும் பழமையையும் நினைத்துதான் அதனை கற்க வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டின் குடிமகனுக்கான பெருமைக்குரிய கடமையாக நினைத்து கற்றாலே போதுமானது. நாட்டிற்காக இரத்தம் சிந்தி நாட்டுப் பற்றைக் காட்ட வேண்டியதில்லை, பிழையற தேசிய மொழியினைப் பேசினாலே போதுமானது.