கோலாலம்பூர், ஆக. 22-

இந்தியா மலேசியாவின் நட்புறவு அடுத்த கட்டத்தை எட்டுவதற்கு மலேசியாவிற்கான இந்தியத் தூதர் திருமூர்த்தியின் பங்கு அளப்பரியது என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தேற்றுநர் டான்ஸ்ரீ தம்பிராஜா புகழாரம் சூட்டினார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலைய ஒருங்கிணைப்பாளர்களுடன் டான்ஸ்ரீ தம்பிராஜா, பிரகாஷ் ராவ்

4 ஆண்டுகாலமாக மலேசியாவிற்கான இந்திய தூதரான அவரின் மூலம் மலேசிய இந்தியர்கள் பல நன்மைகளை அடைந்துள்ளார்கள். அதோடு மலேசிய இந்திய மாணவர்கள், இந்தியாவின் உபகாரச் சம்பளத்தில் கல்வி பயில்வதற்கும் அவர் வழிவகுத்தார். அவரின் சேவை மேன்மேலும் தொடர வேண்டுமென டான்ஸ்ரீ தம்பிராஜா கூறினார்.

மலேசியா இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் இன்றுவரை நட்புறவை பேணி வருகின்றன. அதில் திருமூர்த்தி முக்கிய பங்காற்றியுள்ளார் என ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஏற்பாடு செய்த மலேசியாவிற்கான இந்திய தூதர் திருமூர்த்தியுடன் ஒரு மாலைப் பொழுது எனும் நிகழ்ச்சியில் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருமூர்த்திக்கு டான்ஸ்ரீ தம்பிராஜா சிறப்புச் செய்தபோது

திருமூர்த்தியுடனான தமது நினைவலைகளை ஆஸ்ட்ரோ குழுமத்தின் உதவித் தலைவர் டாக்டர் ராஜமணி பகிர்ந்து கொண்டார். அதோடு தமிழ் மட்டுமின்றி 5 மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர் திருமூர்த்தி, அவருக்கு அரபு மொழியும் தெரியுமென அவர் கூறியபோது, அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் பிரகாஷ் ராவ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மலேசியாவிற்கான தூதராக யாரை நியமிப்பது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுக்கும் தருணத்தில் தாமே முன் சென்று தம்மை நியமிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டதாக திருமூர்த்தி கூறினார். அதற்கு மோடி மலேசியாவில் உறவினர்கள் இருக்கிறார்களா? என்று கேட்டார். இல்லை என்றேன்.

ஆனால் இந்த 4 ஆண்டு காலத்தில் பல உறவுகளை நான் அடையாளம் கண்டுவிட்டேன் என அவர் தெரிவித்தார். நமது பயணத்தில் உறுதியாக இருந்தால் நமக்கானது நிச்சயம் நம்மை வந்து சேரும் என திருமூர்த்தி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ கோகிலன் பிள்ளை, மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டத்தோ அட்சயகுமார், டத்தோ பரமசிவம் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.