புத்ரா ஜெயா ஆக. 28-

பிறப்பு பத்திரங்கள், அடையாள கார்டுகள் மற்றும் குடியுரிமை தொடர்பான அடையாள ஆவணங்களை பரிசீலிக்கும் நடைமுறை இன்னும் மந்தமாகவே இருப்பதாக  டிரா மலேசியா தலைவர் சரவணன் சின்னப்பன் தெரிவித்தார்.

உண்மையில் அடையாள ஆவணங்களை பதிவு செய்யவும் மற்றும் அதனை பரிசீலித்து வழங்கப்பட்ட பொற்காலமாக 2008 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரைக்கான  காலகட்டத்தை கூற முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த காலகட்டத்தில் உள்துறை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ  ஹிஷாமுடின் உசேன் அடையாள ஆவணங்கள் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியதாக சரவணன் சொன்னார். ஹிஷாமுடின்  ஒரு வழக்கறிஞராகவும் இருந்த அனுபவத்தினால் இந்த விவகாரத்தை கருணை அடிப்படையில் பரிசீலித்ததால் அதிகமான விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக  அவர் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுவரை அடையாள ஆவணங்களை பரிசீலிக்கும் விவகாரம் சவால் நிறைந்த ஒன்றாக அமைந்ததாக சரவணன் சுட்டிக்காட்டினார் .இந்த காலகட்டத்தில்  உள்துறை  அமைச்சராக பணியாற்றிய டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி காலத்தில் அடையாள ஆவணங்களுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிப்பது தாமதமாகவும் அல்லது மந்தமாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

2014ஆம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை அடையாள ஆவணங்களுக்காக 25 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 13,000 பேரின் விண்ணப்பங்கள் அனைத்தும் சுமுகமான நிலையில் தீர்வு காணப்பட்டது.

7,000 விண்ணப்பங்கள் இன்னமும் பரிசீலனையில் உள்ளன. இதர 5,000ஆயிரம் விண்ணப்பங்கள் போதுமான அல்லது சரியான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அவை சவால் நிறைந்த  விண்ணப்பங்களாக உள்ளன.

2018ஆம் ஆண்டில் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த விண்ணப்பங்களில் 60 அங்கீகரிக்கப்பட்டன. 1,800 பேருக்கு அடையாள கார்டுகள் வழங்கப்பட்டன. இன்னும் 10,000த்திற்கும் மேற்பட்டோர் அடையாள ஆவணங்கள் இல்லாமல் இருக்கக் கூடுமென தாம் நம்புவதாக சரவணன் தெரிவித்தார்.