பினாங்கு, செப் 30-
வருடத்தில் புரட்டாசி சனியன்று மலரும் மஹாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் தினமான பித்ரு வழிபாட்டு நிகழ்வு பினாங்கு மாநிலத்திலுள்ள தெல்லோக் கும்மார் கடலோரத்தில் நடைபெற்றது.
மாநிலத்தில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஆன்மீகத் தொண்டாற்றி வரும் சமயப் பற்றாளர் எஸ்.தனராஜ் என்பவர், முன்னோர்களை நினைவு கூர்ந்து இந்த விசேட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த வழிபாட்டு நிகழ்வில் உள்ளூர்வாசிகள் பலருடன், பேராக், பெர்லிஸ், கோலாலம்பூர், ஜோகூர், போன்ற மாநிலங்களிலிருந்தும் சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய அயல் நாடுகளிலிருந்தும் சமய ஆர்வலர்கள் பங்கேற்று தத்தம் முன்னோர்களுக்கான பித்ரு வழிபாட்டை நடத்தினர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுப்பதற்கு மஹாளய அமாவாசை சிறப்பான நாள் என்பதை கருத்திற் கொண்டு, இந்த வழிபாட்டு நிகழ்ச்சியை தாம் கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வந்திருக்கும் நிலையில், இம்முறை 7ஆம் ஆண்டாகவும் தொடர்ந்திருப்பதாக தனராஜ் விவரித்தார்.
முன்னோர்களுக்கு மோட்சம் கிட்டுவதற்கு வகை செய்யும் இந்த பித்ரு வழிபாட்டுச் சடங்கினை மாநிலத்தின் செபராங் ஜெயா பகுதியைச் சேர்ந்த நரசிங்க தாஸ் குருக்கள் தனது சீடர்களுடன் பொறுப்பேற்று நடத்தினார்.காலை 6.00 முதல் மாலை 4.00 மணி வரையில் நடைபெற்ற இந்த வழிபாட்டு பூசையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

