பத்து கேவ்ஸ், ஏப்..22-
வரும் 15 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஜசெக கடுமையாகப் போராடும். இக்கட்சி மீதான மக்களின் நம்பிக்கையைப் பெறும் முயற்சிகளைக் கட்சி முன்னெடுக்கும் என்று அதன் புதிய தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
மக்களின் செல்வாக்கு பெற்ற ஒரு கட்சியாக ஜசெக பீடு நடை போடுவதற்கு உறுப்பினர்களின் பேராதரவு மிக முக்கியம். இவர்களின் ஆதரவைத் திரட்டுவது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக தலைவர்கள் உட்பட சிலாங்கூரில் செயல்படும் ஜசெக தலைவர்களின் பணியாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
“ஐக்கியமிக்க ஒரு குழுவாக செயல்பட்டு வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தானின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்” என்று இங்குள்ள ஷெங்கா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஜசெக தலைமைச் செயலாளருடன் ஒரு மாலைப் பொழுது எனும் விருந்துடன் கூடிய நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
டி.கண்ணன் ஏற்பாட்டில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிக் ஷாக்கரன் இணை ஏற்பாட்டாளராகச் செயல்பட்ட இந்நிகழ்ச்சியில் சுமார் 230 இந்திய ஜசெக தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
புத்ரா ஜெயாவை மீண்டும் கைப்பற்றுவதற்கு 10 ஆண்டுகள் வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை.ஜசெக உறுப்பினர்கள் உட்பட பக்காத்தான் கூட்டணி உறுப்பினர்களின் பேராதரவு வ்ழி மக்களின் நன்மதிப்பைப் பெறுவோமேயானால் இந்த இலக்கை வ்ரும் பொதுத் தேர்தலில் நம்மால் நிச்சயம் அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்குச் சிறந்த வியூகம் தேவை..சிலாங்கூரில் அனைத்து தலைவர்களும் கட்சி வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடிய நோக்கம் நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கே என்றார்.
17 வயதில் ஜசெகவில் சேர்ந்த அந்தோணி லோக் அர்ப்பணிப்புமிக்க ஒரு தலைவர் என்று நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய டி.கண்ணன் புகழாரம் சூட்டினார்.
“கட்சியின் தலைமைச் செயலாளர் பணியை திறம்பட மேற்கொள்வதற்குரிய அனைத்து தகுதிகளையும் அந்தோணிக் லோக் கொண்டுள்ளார். மன உறுதி படைத்த இவர் தனது பொறுப்புகளை திறம்பட ஆற்றக்கூடிய ஆற்றல் படைத்தவர்.இவர் கட்சியின் தலைமைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது சரியான தேர்வு” என்றார் கண்ணன்.
நெகிரி மாநிலத்தில் நான்கு இந்திய சட்டமன்ற உறுப்பினர்களை ஆட்சிக்குழு உறுப்பினராக்கிய பெருமைக்குரியவர் அந்தோணி லோக் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஜசெகவின் தலைமைச் செயலாளராக அந்தோணி லோக் தேர்ந்தெடுக்கப்பட்டது சிறந்த தேர்வு என்று ஈப்போ பாராட் சட்டமன்ற உறுப்பினர் குலசேகரன் குறிப்பிட்டார்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, மாநில ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள், கிளைத் தலைவர்கள்., சமூக தலைவர்கள் உட்பட இதர பொறுப்பாளர்களோடு மலாக்கா, நெகிரி, பகாங், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச ஜசெக பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் கேள்வி -பதில் அங்கம் மற்றும் கௌரவிப்பு நிகழ்ச்சி போன்றவையும் இடம் பெற்றன.

