கோலாலம்பூர், ஏப்.23-

     தேசிய நிலையிலான வர்த்தக நடவடிக்கைகளில் இந்திய வர்த்தக சமூகத்திaன் குரலை ஓங்கச் செய்ய வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்கிறார் நாளை நடைபெறவிருக்கும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நிவாஸ் ராகவன்.

     இலக்கவியல், தானியங்கி, இணைய பாதுகாப்பு, தரவு ஆய்வு, இயந்திரவியல் (ரோபோடிக்ஸ்) போன்ற அம்சங்களை உள்ளடக்கிய 4.0 தொழிற்துறை புரட்சி திட்டங்களுக்கு வர்த்தகர்களைத் தயார்படுத்துவதும் தங்கள் அணியினரின் தேர்தல் கொள்கை அறிக்கையில் அடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

     மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் (மெட்ரேட்) ஒத்துழைப்புடன் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் சந்தை ஏற்றுமதி வாய்ப்புகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்திய காலத்தில் வர்த்தகர்களை பல்வகை முதலீட்டு திட்டங்களில் ஈடுபடச் செய்வதற்கும் தாங்கள் திட்டமிட்டிருப்பதாக அனேகன் மின்னேட்டிடம் அவர் விவரித்தார்.

     முறையான வழிகாட்டி மற்றும் பயிற்சியுடன் அதிகமான இந்திய இளைஞர்களை  தொழில்முனைவர் சிந்தைமிக்கவர்களாக உருமாற்றம் காணச் செய்ய வேண்டும் என்பதும் வெற்றி பெற்றவுடன் தாங்கள் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள மேலும் ஒரு நடவடிக்கையாகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

     வர்த்தக தகவல் மையம், தொழில் முனைவர் மேம்பாடு, இளம் மற்றும் மகளிர் தொழில் முனைவர்கள், 4.0 தொழிற்துறை புரட்சி, மனித முதலீட்டு மேம்பாடு, நிதி முதலீடு, அனைத்துலக வாணிபம் & மெட்ரேட் ஏற்றுமதி திட்டம், வர்த்தக சந்தைகள் & வெளிநாட்டு வர்த்தக

நிறுவனங்களுடன் தொடர்பு, தொழிற்துறை வல்லுனர்களுடன்  கட்டமைப்பு, அரசாங்கத் திட்டங்கள் மற்றும் தொழிற்துறை வாய்ப்புகளை எடுத்துரைத்தல் போன்றவையும் துடிப்புமிக்க வர்த்தக சமூக உருவாக்கத்திற்குத் தாங்கள் அமல்படுத்த விரும்பும் அம்சங்களாகும் என்றார்.

     சங்கத்தின் 2022-2024 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் நிவாஸ் அணியில்  துணைத் தலைவர், உதவி தலைவர், பொருளாளர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியை எதிர்நோக்குகின்றனர்.