செராஸ், ஜூலை 25-
ஆபத்து அவசர வேளைகளில் நோயாளிகளுக்குத் தேவைப்படும் ரத்தத்தைப் பெறுவதற்கு ஆங்காங்கே ரத்த தான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது அவசியம். நோயாளிகளின் தேவையை உணர்ந்து சில அமைப்புகள் ஆண்டுதோறும் ரத்த தான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யப்படுவது பாராட்டுக்குரியது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் தெரிவித்தார்.
மேற்கோளாக, மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா 60 ஆவது ஆண்டாக ரத்த தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது உண்மையில் பாராட்டுக்குரியது. இவர்களைப் பின்பற்றி மற்ற அமைப்புகளும் இது போன்ற நிகழ்சிகளை ஏற்பாடு செய்தால் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் ரத்த பற்றாக்குறை பிரச்னை இருக்காது என்றார் அவர்.

இந்த சபாவின் தலைவர் டாக்டர் பிரேம கண்ணன் மற்றும் செயலவையினரைப் பாராட்டிய கணபதிராவ், இவர்களின் இத்தகு நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் ரத்த தானத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைப்பதற்கு உதவும் என்றார் .
தேசிய ரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் ரத்த பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் மலேசியா ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா 2 தினங்களுக்கு ரத்த தான முகாமை நடத்தியதாகவும் 300 பேர் ரத்த தானம் செய்ததாகவும் பிரேம கண்ணன் விவரித்தார் .
செராஸ், ஏஇயோன் பேரங்காடியில் நடைபெற்ற இந்த முகாமில் ரத்த தானம், உடல் உறுப்பு தானம் மற்றும் மருத்துவபரிசோதனை ஆகியவற்றில் அதிகமானோர் கலந்து கொண்டது அவர்களிடையே விழிப்புணர்வு மேலோங்கி இருப்பதைக் காட்டுவதாக அவர் சொன்னார்.
கொலம்பியா ஆசியா மருத்துவமனை ஏற்பாட்டில் புற்றுநோய் கண்காட்சி, தேசிய புற்றுநோய் மன்றத்தின் யோகா கண்காட்சி, சிறார்களுக்க்கான வர்ணம் தீட்டும் போட்டி போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டன.
கோவிட் 19- பெருந்தொற்று காரணமாக நாடு முழுமையும் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் இதனை ஈடு செய்வதற்காகவே தற்போது மாதந்தோறும் ரத்த தான முகாமிற்குத் தாங்கள் ஏற்பாடு செய்து வருவதாக பிரேம கண்ணன் கூறினார்.
இந்த முகாமிற்கு ஏஇயோன் செராஸ் செலாத்தான் பேரங்காடி நிர்வாகி திருமதி நளினி பழனிசாமி , காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் தியாகராஜன், எம் ஐ எஸ் எஸ் அர்விந்த் அப்பளசாமி, யோகா வெல்னஸ் டாக்டர் அட்ரியன் சுரேஷ் மற்றும் கே தேவன் எண்டர்பிரைஸ் தலைமை நிர்வாக அதிகாரி தேவன் கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

