பத்துகாஜா – பிப்பரவரி 19
பேரா பத்து காஜாவில் உள்ள கிந்தா வேலி தமிழ்ப்பள்ளியில், பள்ளி அளவிலான தைப் பொங்கல் விழா கடந்த வெள்ளிக்கிழமை (03.02.2023) மாலை 2.00 மணிக்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
மாணவர்களிடையே தமிழர் கலாச்சாரத்தை அறிய வைப்பதற்கும் நன்றியுணர்வை வலுப்படுத்துவதன் நோக்கத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் என மூன்று பொங்கல் வைக்கப்பட்டது. நமது கலாச்சாரம் தொடர்பான போட்டளும் நடத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டியும் அரிசி கோலம் போடும் போட்டியும், முன்னாள் மாணவர்களுக்கென தோரணம் பின்னும் போட்டியும் கரும்பு கடிக்கும் போட்டியும், பெற்றோர்களுக்காக உரி அடித்தல். பொங்கல் பானை அலங்கரித்தல் போட்டியும் நடைபெற்றன.
பெற்றோர்களும் முன்னாள் மாணவர்களும் திரளாக வந்து, ஏற்பாடு செய்திருந்த எல்லாப் போட்டிகளிலும் சிறப்பாக கலந்து கொண்டனர். அனைத்து மாணவர்களும் மிகவும் ஆர்வமாக போட்டியில் கலந்து கொண்டதுடன் கரும்பு சாப்பிடும் போட்டி புது அனுபவமாக இருந்ததாகக் கூறினர். வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இப்பள்ளி குறைந்த எண்ணிக்கையில் (68) மாணவர்களைக் கொண்டிருந்தாலும், அனைத்து நடவடிக்கைகளும் பெரிய பள்ளிகள் போன்று சிறப்பாக நடத்தப்படுகின்றன என்பதாக பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ஆ.லோகேஸ்வரி தெரிவித்தார். நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நிலைநிறுத்தும் தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாக இருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அருகில் வாழும் மக்கள் இப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை நம்பிக்கையோடு சேர்க்கலாம் எனக் கூறினார். இப்பள்ளியின் நடவடிக்கைகளை மேலும் தெரிந்து கொள்ள பள்ளியின் சமூக வலைத்தளங்களை ( Youtube / Facebook ) நாடலாம் என்று கூறி , இப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற உதவிய பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
