கோலாலம்பூர், நவ.12-
தீபத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள். மங்கல ஒளியின் தீபம், இருளை விரட்டுவது போல, அஞ்ஞானத்தை அகற்றி, சமுதாயத்தை நல்வழிபடுத்த நமக்கான ஒளி கல்வி ஆகும்.
கல்வி என்பது அடிப்படை உரிமை. கல்வியால் மட்டுமே, அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் கல்வி என்பது இந்த நாட்டில் நமது சமுதாயத்தை உயர்த்தக் கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம்.
‘கேடில் விழுச் செல்வம் கல்வி’ என வள்ளுவர் கூறியிருப்பது போல, அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வி என்கிற காரணத்தினால், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக அமைப்புகள், அரசியல் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் அனைவரும் நமது குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்குக் கைக்கோர்க்க வேண்டும். கல்வி எனும் சிறந்த செல்வத்தின் பயனை ஒவ்வொரு இந்திய குழந்தையும் அனுபவிக்க வேண்டும்.
மலேசிய இந்தியர்களுக்கான தாய்க் கட்சி ம.இ.கா நமது வருங்கால சந்ததியினரின் கல்வி மேம்பாட்டுக்கு தொடர்ந்து தோள் கொடுக்கும் என்பதை இங்கு உறுதி செய்கிறோம். ம.இ.கா கல்விக் குழுத் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் நான் நமது மாணவர்களின் கல்வித் திறனையும், அவர்களது தனித் திறனையும் மேம்படுத்த பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறேன். செயற்படுத்தப்படும் திட்டங்களுக்கும் செயல்படுத்தவிருக்கும் திட்டங்களுக்கும் அனைத்து இந்திய ஆசிரியர்களும், கல்விசார் அதிகாரிகளும், பெற்றோரும் கைக்கோர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை இந்தத் திருநாளில் முன்வைக்கிறேன்.
கடந்த காலங்களை ஒப்பிடுகையில், தற்போது நமது மாணவர்கள் கல்வி கேள்விகளில் மட்டும் அல்லாது அறிவியல் கண்டுபிடிப்பு, விளையாட்டு என பிற நடவடிக்கைகளிலும் உலகளாவிய ரீதியில் சிறந்து விளங்குவது நமக்குப் பெருமை சேர்க்கிறது. இது தொடர வேண்டுமெனில், நமது சமுதாயத்திலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஒரே நோக்கத்தோடு, கல்வி மேம்பாட்டையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். கல்வித் திறனையும், அவர்களது தனித் திறனையும் மேம்படுத்த நாம் அனைவரும் பாடுபட வேண்டும். தீபாவளியின் சுடர், கல்விச் சுடராக காலந்தோறும் மிளிர வேண்டும்.
-டத்தோ டாக்டர் நெல்சன் ரெங்கநாதன்
ம.இ.கா கல்வி குழுத் தலைவர்
