ஷா ஆலம், மார்ச் 12-
இம்மாநிலத்தில் இந்திய சமூகத் தலைவர்கள் நியமனத்தில் இம்முறை மஇகா பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராயுடு தெரிவித்தார்.
கடந்த முறை நடைபெற்ற மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிட்ட தொகுதிகளில் மஇகா சார்பில் இந்திய சமூகத் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.
“ஓரிரு தொகுதிகளுக்கான மஇகாவின் பிரதிநிதிகளின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேளையில், அவை தற்போது பரிசீலனையில் உள்ளன. மஇகா சார்பில் இந்திய சமூகத் தலைவர்கள் நியமிக்கப்படுவதில் எனக்கு எந்தவோர் ஆட்சேபனையும் இல்லை. பெயர்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் “என்றார் பாப்பாராயுடு.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைப் பொறுத்தவரை அமானா கட்சியின் ஓர் இடத்தைத் தவிர்த்து இதர அனைத்து தொகுதிகளுக்கும் இந்திய சமூகத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். அதே வேளையில், தேசிய முன்னணி போட்டியிட்ட தொகுதிகளுக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என அவர் சொன்னார்.
சிலாங்கூரில் சுமார் 64 இந்திய சமூகத் தலைவர்கள் உள்ளனர். அவர்களில் 28 பேருக்கு மட்டும் இன்னும் நியமனக் கடிதங்கள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு அடுத்த வாரத்திற்குள் அக்கடிதங்கள் வழங்கப்பட்டு விடும் என்றார்.
முன்னதாகக் கடந்தாண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் சிலாங்கூரில் 12 தொகுதிகளில் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து அம்னோ போட்டியிட்டது.
