கோலாலம்பூர், ஜன. 29-இன்று கொண்டாடப்படும் சீனப்புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் வளத்தையும், வெற்றியையும் நல்ல உடல் நலத்தையும் கொண்டு வரட்டும் என்று கெஅடிலான் கூட்டரசு பிரதேச உதவி தலைவர் லாய் சென் ஹெங் தெரிவித்தார்.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒருவர் மற்றவரின் சமய மற்றும் கலாசார பண்புகளைப் போற்றும் மக்களாக நாம் வாழ்ந்து வருகிறோம் என்று சீனப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய பண்பானது நாம் பல்வேறு சவால்களைக் கடந்து முன்னேற்றம் காண்பதை ஊக்குவிக்கும் என்றார் வங்சா மாஜூ கெஅடிலான் டிவிஷன் தலைவருமான சென் ஹெங்.
நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து குடும்ப உறவுகள், நண்பர்கள், சுற்றத்தார் மற்றும் சமூகத்தை மதிக்க வேண்டும். அதே வேளையில், மற்றவர்களோடு சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வது சுபீட்சமான சமூகத்தை உருவாக்கும்.
விவேகம், பொருத்தம் மற்றும் உருமாற்றம் போன்றவற்றைக் குறிக்கும் பாம்பு ஆண்டு மக்களிடையிலான ஐக்கியம் மற்றும் ஒத்துழைப்பு வாயிலாக மட்டுமே சிக்கல்மிக்க உலக சவால்களை நாம் எதிர்நோக்க முடியும். இது நமது கூட்டு இலக்கு மற்றும் கடப்பாடாகும்.
நமது நாட்டின் சமூக மேம்பாட்டின் ஆணிவேராக கல்வி மற்றும் கல்வி கட்டமைப்பு மேம்பாட்டு திகழ்கிறது.ஒவ்வொரு மாணவருக்கும் சரிமமான மற்றும் தரமான கல்வி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.இதன் பொருட்டு கல்வி துறையில் அரசாங்கம் தொடர்ந்து முதலீடு செய்யும் என்று சென் ஹெங் நம்பிக்கை தெரிவித்தார்.
அதே வேளையில், நாட்டின் நிலைத்தன்மை மற்றும் வளப்பத்திற்கு அடிப்படை ஒற்றுமை என்பதை மலேசிய மடானி அரசாங்கம் பறைசாற்றியுள்ளது.
மலேசிய தலைநகர் எனும் வகையில் கோலாலம்பூர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாசார அம்சத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதன் அடிப்படையில் நவீன போக்குவரத்து முறை, பழைய பகுதிகளைப் புதுப்பித்தல், பசுமை நகர் திட்டம் போன்ற துறைகள் அவசியம் சீரமைக்கப்பட வேண்டும்.
இதன் பொருட்டு 2025 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் சாலை, போக்குவரத்து மற்றும் சமூக அடிப்படைத் திட்டங்கள் மீது கவனம் செலுத்தப்படும். கோலாலம்பூரை விவேகமிக்க மாநகராக உருவாக்குவதில் இந்நடவடிக்கை பெரும் பங்காற்றும்.
சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
*கோங் சி ஃபா சாய் !*

