பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11-

அமெரிக்கா விதித்துள்ள 25 விழுக்காடு இறக்குமதி வரியின் தாக்கத்தைக் குறைக்க ஏதுவாக சீனா உட்பட உலகின் மற்ற நாடுகளுடனான தனது வர்த்தகத்தை மலேசியா அதிகரிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது ஆலோசனை கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி கொள்கை அந்நாட்டின் மீது எதிர்மறையான தாக்கத்தை விளைவிக்கக் கூடும் என்று ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில் துன் மகாதீர் சுட்டிக் காட்டினார்.

இந்தப் பரஸ்பர வரியானது உலக நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அமெரிக்கர்களையே இது வெகுவாகப் பாதிக்கும் என்றார்.

காரணம், அமெரிக்கர்கள் தங்கள் சொந்த நாட்டைத் தவிர்த்து மலேசியா, இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளில் குறைந்த செலவில் தொழிற்துறை நிறுவனங்களை அமைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்காவிற்கு பொருள்களை ஏற்றுமதி செய்பவர்கள் இதனால் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்.

அமெரிக்கா போன்று மற்ற நாடுகள் அதிக வரிகளை விதிக்கவில்லை. ஆகையால், உலகின் மற்ற நாடுகளுடன் மலேசியா தனது வர்த்தகத்தை அதிகரிப்பது அவசியம் என்றார்.