தம்புன், ஜூலை 14-
தம்புன், ஆறாவது மைலில் அமைந்துள்ள அருள் மிகு தேவஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
ஆலயத் தலைவர் கோ. சத்தியராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆலய பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலயத்தின் நிலப் பிரச்சினைக்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசனின் பெரும் முயற்சியின் வழி தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்க நிலத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் அருகே மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
இந்நிலையில் ஆலயத்தை அகற்றும் நடவடிக்கையில் நில அலுவலகம் இறங்கியது.
இவ்விவகாரம் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் இந்திய விவகார பிரிவு தலைவருமான சிவநேசனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு வருகை புரிந்த சிவநேசன், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அருகில் உள்ள இடத்தில் ஆலயத்தை நிர்மாணிப்பதற்கான நிலத்தை அடையாளம் கண்டார்.
சிவநேசனின் முயற்சியில் புதிய இடம் உறுதி செய்யப்பட்டதாக ஆலய செயலாளர் கதிரவன் நாகப்பன் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
இதனிடையே, ஆலய திருப்பணிக்கு சுமார் 2 லட்சம் வெள்ளி தேவைப்படும் பட்சத்தில் 5 ஆயிரம் வெள்ளி வழங்குவதாக இங்கு நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட ஆலயத்தின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ கண்ணப்பா உறுதி அளித்துள்ளார்.
தேவஸ்ரீ முனீஸ்வரர் ஆலய திருப்பணி அடுத்தாண்டு பிப்ரவரி் மாதவாக்கில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

