கோலாலம்பூர்:

நாட்டின் மனித மூலதன மேம்பாட்டை வலுப்படுத்தவும், தொழிலாளர் சந்தையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் 710 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘PACE’ (Progressive Acceleration for Capability and Employment) எனும் பொருளாதாரத் திறன் தொகுப்புத் திட்டத்தைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

புக்கிட் ஜாலில் யூனிஃபி (Unifi) அரங்கில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய தொழிலாளர் தின விழாவில் உரையாற்றிய பிரதமர், இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துகொண்டார்.

1) சிங்கப்பூர் வாழ் மலேசியர்களுக்குப் பாதுகாப்பு:

வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசியர்களுக்கு, குறிப்பாக மலேசியா-சிங்கப்பூர் எல்லை தாண்டிச் செல்லும் 480,000 தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்க 2017-ஆம் ஆண்டின் சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும். வாரத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2) சமூகப் பாதுகாப்பு வலை (RM580 மில்லியன்):

மனிதவள அமைச்சின் (KESUMA) கீழ் பெர்கேசோ (PERKESO) மூலம் வேலைவாய்ப்பு காப்பீட்டு முறையை (SIP) வலுப்படுத்த 580 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இது வேலையிழந்தவர்களுக்கு மறுவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சியளிக்க உதவும்.

3) பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு (RM100 மில்லியன்):

‘HRD Yakin MADANI’ திட்டத்தின் கீழ் மனிதவள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp) 100 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இது இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் AI போன்ற நவீன தொழில்நுட்பத் துறைகளில் போட்டித்தன்மையுடன் இருக்க உதவும்.

4) கிக் (Gig) தொழிலாளர்கள் மேம்பாடு (RM20 மில்லியன்):

இ-ஹெய்லிங் (e-hailing) மற்றும் பி-ஹெய்லிங் (p-hailing) தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டிற்காக திறன் கல்வி நிதி அமைப்புக்கு (PTPK) 20 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுகிறது.

5) தொழில்துறை பயிற்சி மானியம் (RM10 மில்லியன்):

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (PMKS) மற்றும் புத்தாக்க நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஆதரவாக டேலன்ட்கார்ப் (TalentCorp) மூலம் 10 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்படும்.

இந்தத் திட்டங்கள் மலேசியத் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதோடு, மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில் அவர்களைத் தயார்படுத்தும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.