பெட்டாலிங் ஜெயா:

நடப்பு நவீன தொழில்நுட்ப யுகத்திற்கு தனது மாணவர்களைத் தயார்படுத்தும் முயற்சியாக
ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் (எஸ்எம்சி) பொறியியல் மற்றும் தொழில் நுட்ப அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

சிரமமான சூழலில் வெளிநாடுகளில் படித்து இன்று பொறியியல் மற்றும் தொழில் நுட்ப துறைகளில் பணிபுரியும் முன்னாள் ஸ்ரீ முருகன் நிலைய மாணவர்கள் இத்துறைகளில் வருங்கால வல்லுநர்களை உருவாக்க இந்நிலையத்துடன் கைகோர்க்கத் தயாராகிவிட்டதாக பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலைய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ் தெரிவித்தார்.

“இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழ் படித்தவர்கள். இன்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் உள்ளனர். எஸ்எம்சி மாணவர்களுக்கு இவ்விரு துறைகளிலும் வழிகாட்டியாக இருந்து அவர்களையும் முன்னேற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு எங்களோடு இணைந்து களம் இறங்கியுள்ளனர்” என்று இங்குள்ள தோட்ட மாளிகையில் நடைபெற்ற எஸ்எம்சி பிரிக்ஃபீல்ட்ஸ் நிலையத்தின் மகா யுத்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

எஸ்எம்சி நிலையத்தின் கல்வி யுத்தம் நாடளாவிய நிலையில் நடைபெற்று முடிந்த வேளையில்
பிரிக்ஃபீல்ட்ஸ் நிலையத்தின் ஏற்பாட்டிலான மகா யுத்தத்தில் மாணவர்கள் , பெற்றோர்கள் என 1,000 திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கல்வியின் மீதும் தங்கள் பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்தின் மீதும் பெற்றோர்கள் கொண்ட அக்கறையையே இது புலப்படுத்தியுள்ளது என்றார் ஸ்ரீ கணேஷ்.

இந்நிகழ்ச்சியில் கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதே வேளையில், மதிப்பீட்டு தேர்வில் சிறந்து விளங்கிய பிரிக்ஃபீல்ட்ஸ் மற்றும் காஜாங் எஸ்எம்சி மாணவர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.

கல்வி வாயிலாக தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்கு எஸ்எம்சி ஆற்றிய பங்களிப்பு குறித்த முன்னாள் மாணவர்களின் பேச்சு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்துணர்வையும் , தன்னம்பிக்கையையும் தந்தது.