பெட்டாலிங் ஜெயா:
கல்வி ஒன்றே தங்கள் பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்தின் சுடரொளி என்பதற்கு மிகச் சிறந்த சான்றாகத் திகழ்ந்தது ஸ்ரீ முருகன் நிலையத்தின் மாபெரும் யுத்தம்.
மாணவர்கள், பெற்றோர்கள் என அரங்கம் நிரம்பி வழிந்த நிலை இந்தியர்கள் கல்வியில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை பறைசாற்றியதாக ஸ்ரீ முருகன் நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.
கல்வி வாயிலாக தலைநிமிர்ந்த, பெருமைத்தக்க, பார் போற்றுபவர்களாக இந்தியர்கள் பிரகாசிக்க முடியும் என்பதை 23 நாடுகளில் பல்வேறு துறைகளில் வெற்றி நடைபோட்டு வரும் முன்னாள்
ஸ்ரீ முருகன் நிலைய மாணவர்கள் நிரூபித்துள்ளனர் என்றார்.
இந்த முன்னேற்றம் தங்களோடு நின்றுவிடாது அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற இவர்களின் எண்ணம் போற்றத்தக்கது.
“தங்களின் அறிவு மற்றும் அனுபவத்தை இந்த மாணவர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லத் தயாராகிவிட்டனர்” என்று
இங்குள்ள தோட்ட மாளிகையில் நடைபெற்ற எஸ்எம்சி பிரிக்ஃபீல்ட்ஸ் நிலையத்தின் மகா யுத்த நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அதே வேளையில், கல்விக்கு வறுமை தடைக் கல்லாக இருக்கக்கூடாது. சிறந்த மதிப்பெண்கள் பெற்றால் உபகாரச் சம்பளம் வழி உயர் கல்வி பெறலாம் என்பதற்கு பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் சாதனை படைத்து வரும் ஸ்ரீ முருகன் நிலைய மாணவர்கள் சான்றாகத் திகழ்கின்றனர்.
டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜாவின் இலட்சியப் பாதையில் நம் இந்திய மாணவர்கள் வேரூன்றி நிற்பது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது.
கல்வியில் சிறந்து விளங்கிய இவர்கள் நாட்டின் நற்பெயரை உலக அரங்கில் மிளிரச் செய்துள்ளது மேலும் பெருமை அளிக்கிறது என்றார்.

