கோலாலம்பூர்:
சீனர்களுக்கான 100 மில்லியன் ரிங்கிட் எம்.எஸ்.எம்.இ கடனும், இந்தியர்களுக்கான 50 மில்லியன் ரிங்கிட் SPUMI கடனும் ஷரியா கட்டுப்பாடுகள் உள்ள வங்கிகள் மூலம் வழங்கப்படுவது அநியாயமானது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்துள்ளார்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் வெளியிட்ட கருத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், முஸ்லிம் அல்லாத வணிகர்கள் கடன் பெற ஷரியா விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்ற நிபந்தனை தர்க்கரீதியாகவும் நடைமுறையிலும் பொருத்தமற்றது என்று அவர் கூறினார்.
குறிப்பாக காபி கடைகள், பன்றி இறைச்சி சார்ந்த உணவகங்கள், பாரம்பரிய சீன மருத்துவ நிலையங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் செயல்படும் சீன வணிக நிறுவனங்கள் தங்களது வணிக இயல்பை மாற்ற வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்றும், அதேபோல் ஹலால் அல்லாத உணவகங்கள் மற்றும் வழக்கமான தொழில்களில் ஈடுபடும் இந்திய வணிகர்களும் தற்போதைய நடைமுறையால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த இரண்டு கடன் திட்டங்களையும் கட்டாய ஷரியா இணக்கமின்றி இஸ்லாமிய மற்றும் வழக்கமான வங்கி சேவைகளை வழங்கும் பேங்க் சிம்பானான் நேஷனல் (BSN) வங்கியின் கீழ் மாற்றுவது தான் நியாயமான தீர்வாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், நாடு முழுவதும் பி.எஸ்.என் வங்கிக்கு 387 கிளைகள் இருப்பதால், SME வங்கி மற்றும் பாங்க் ரக்யாட்டை விட அதிகமான மக்களுக்கு இந்த கடன் வசதிகள் சென்றடையும் என்றும், குறிப்பாக சபா, சரவாக் மற்றும் அரைநகர்ப்புற பகுதிகளில் உள்ள சிறு வணிகர்களுக்கு இது பெரிதும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் கூட்டுறவு அமைச்சும், நிதி அமைச்சும் உடனடியாக இந்த இரண்டு கடன் திட்டங்களையும் பி.எஸ்.என் வங்கியின் கீழ் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீ.கணபதிராவ் கேட்டுக்கொண்டார்.

